வெள்ளி, 31 டிசம்பர், 2010

அன்பு!!


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்.

தெய்வத் திருவள்ளுவரின் வாய்மொழி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது இம்மண்ணில்! இவ்வுலகத்தில் அன்பு இல்லாதவர்கள் சுயநலமிக்கவர்களாக திகழ்பவர்கள். அன்புடன் பிறர்க்கு அருள்பவர்கள் என்றுமே தனக்காக வாழாது பிறர்க்காகவே வாழ்பவராவர்.

இவ்வுலகம் அன்பினால் உருவாக்கப்பட்டது. ஆம்! இவ்வுலகைப் படைத்த இறைவன் நம்மீது அன்பு கொண்டதால்தான் இவ்வையகத்தைச் செம்மையாக நமக்குச் செய்தருளினார். அன்பு, இனம்,மதம்,மொழி, ஆகியவற்றைச் சார்ந்து வெளிப்படுவதில்லை. அன்பானது ஆழ்மனதில் இருந்து கசியும் ஒளிப்பிழம்பு. கடவுள் இருக்கிறார் என்பதே நம்மீது பிறர் அன்பு செலுத்தும் போது தான் உணரமுடிகிறது!

அன்பு வெளிப்பாடுகள் அனைத்தும் ரகரகமாய் விதவிதமாய் வெளிப்படுகின்றன. கருவில் உள்ள குழந்தையை அனுதினமும் தடவிக்கொடுக்கும் அம்மாவின் கைகள் முதன்முதலில் அன்பை பரிமாறக் கற்றுக்கொடுக்கின்றன அந்தச் சிசுவிற்கு! மரணப்படுக்கையில் கணவன் இருக்க , மனைவியின் வற்றாது வரும் கண்ணீரும் கேட்காது வரும் கவனிப்பும் அன்பை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

நண்பர்களே ! இதயங்களை அன்பால் வசப்படுதிக்கொல்லுங்கள்; அனைவரும் நமக்குப் பணி செய்வார்கள். இங்கு , " பணி " என்பது வேலையைக் குறிப்பிடவில்லை . அது சுமந்துவரும் அன்பையே குறிக்கிறது. அன்பு ஒன்றே கொடுக்கக் கொடுக்கக் கரையாதது. எப்போதும் எடுத்துக்கொள்ளாமல் கொடுத்துக்கொண்டே இருப்பது!

ஓர் நாள் பாபாவின் கீதைப் பேருரையில் இருந்து வெளிப்பட்ட அன்பின் விளக்கங்கள் என்னை ஆழ்கடலில் ஆழ்த்தியது ! ஆம் ! பகைமை அறியாதது அன்பு; சுயநல மனதிற்கு அப்பாற்பட்டது அன்பு; சினத்தை விட்டு வெகுதூரம் விலகி நிற்பது அன்பு; அன்பு மட்டுமே நாம் நம் எதிரியின் மீது வீசும் சிறந்த ஆயுதமாகும்.

மனிதனை மனிதனாக உயர்த்தக்கூடிய சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு. அன்பு இதயங்கள் அழகுத் தோட்டம்; அன்பு மொழிகள் அத்தோட்டத்தில் பூக்கும் பூக்கள். அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு இதயத்தையும் கனிய வைத்துவிடும். இவையனைத்தையும் விவேகானந்தர் வேலையற்று உரைக்கவில்லை! மனதில் பொங்கிய அன்பு மேலெழுந்து அவரை பேசவைத்துள்ளது.

அன்பின் அடையாளத்தை கிறிஸ்துவ மத விவிலிய நூலில் பத்துக்கட்டளைகளில் ஒரு கட்டளையாக "உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் நீ அன்புகூருவாயாக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புக்கடனை அள்ளி அள்ளித் தாருங்கள். அது வட்டியும் முதலுமாய் திரும்பி வந்துச் சேரும். உங்களை வெறுப்பைப் பார்க்கும் ஒருவர்க்கு நீங்கள் ஒரு புன்சிரிப்பை பிரசவியுங்கள் ! இதில் கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள், நீங்கள் சிரிக்கும் சிரிப்பு எதிரியின் மனதையும் மாற்றும் , சில சமயங்களில் உங்களின் மண்டையையும் உடைக்கும் !

நண்பர்களே! மனித நேய ஒழுக்கத்துடன் பிறரிடம் அன்பு பாராட்டுங்கள்! வாழ்க்கை நம் வசப்படும் ! நன்றி!



2 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

வரிகளில் அன்பின் உன்னதங்கள் அருமை தோழி வாழ்த்துக்கள்

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

நன்றி தோழரே !