சனி, 10 டிசம்பர், 2011

பள்ளிக்கூடம்....!

சிறகுகள் அனைத்தும் 
சிறகடித்துச் சென்று 
ஒட்டி உறவாடி 
உயரப்பறக்கும் ஓர் பெரும்பறவை....
பள்ளிக்கூடம்....!

மனிதனாய் பிறந்த 
குழந்தைகளின் தெவிட்டாத 
தேனின்பம்....

கல்வியைக் காதலித்து 
மணமுடித்துவரும் மணமக்களின் 
தகப்பன் வீடென்றும் கூறலாம்....!

பெற்றோரின் கனவுகளைக் 
கையிலேந்தி ,
இனிப்புப் பனுவல்களை 
முதுகில் சுமந்துச் 
சரமாகச் சீருடையுடன் 
செல்லும் ஏறும்புக்கூட்டங்களின் 
எழிலகம்...!

இந்தக் கோவிலினுள்
பக்தப் பிரஜைகளுக்காகத் 
தன் உயிரையே அர்ப்பணிக்கும் 
ஆயிரம் தெய்வங்கள்,
ஆசிரியர்கள்...!

இதிலும் .,
உயிரைக்குடிக்கும் 
அரக்கியர்களும் உலாவத்தான் 
செய்கிறார்கள்.....
என்ன செய்வது?
விதியின் மீது பழியைப் போட்டு 
பழக்கமாயிற்றே...!

தவமிருந்தாலும் திரும்பிபார்க்காத 
நம்  பிள்ளைப்பருவத்தை,
நரை , திரை, மூப்பு, இவை வந்துற்றபோதும் 
நாம் திரும்பிப்பார்க்கலாம்.... நம் பள்ளிகளின் மூலம்...!

மனிதக் குழந்தைகளே....
படிப்பு முடிந்தாலும் கூட 
அடிக்கடி பறந்து செல்லுங்கள் 
நீங்கள், படித்து, அடித்து, பறந்து, திரிந்து,
சிரித்து , அழுது, மகிழ்ந்த 
நும் பள்ளிகளுக்கு...!

பள்ளிக்கூடம் 
நம் வரலாற்றின் சகாப்தம்...
வாழ்வின் அளப்பரியதோர் 
அத்யாயம்....!

வெள்ளி, 18 நவம்பர், 2011

நாடு எங்கே போகிறது?

மனிதன்,

மதம் பிடித்து

மனம் திளைத்து

மதிமயங்கிவரும்

ஓர் மட்கும் குப்பையானவன்....!


இதில் நம் நாடு...?

பலகோடி மக்கள் சேர்ந்த

ஒருகூட்டுச் சமுதாயமாக

நிரம்பி வழியும் மதுக்கிண்ணம்...!


ஆனால் மனிதம் என்பது?

மனிதனிலும் , நாட்டிலும் ,

தேடிக்கிடைக்காத ஒரு பொக்கிஷம்...!


குப்பையிலும் மதுவிலும்

களவிலும் கொலையிலும்

பொய்யிலும் வழுவிலும்

புரண்டு அழும் ஓர்

ஊமைக்குழந்தை...!


இறைவா....

ஊமைக்குழந்தைக்கு

பேசும் வரமளித்தால்தானே

நாட்டின் காதுகள் திறக்கப்படும்?


நசுங்கிப்போன மனிதனின் ஆறாம் அறிவு,

நலிந்துகொண்டே வந்து விலங்குடன் சேர

விழைகிறது...


நாட்டைக்காக்கும் மன்னர்களும்

விதண்டாவாதத்தில் வீழ்ந்து

நாட்டைப் பணயம் வைத்துத் தம்

வீட்டைக்காக்க முற்படுகின்றனர்...


குழந்தைகளுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டிய

கல்வியும் இன்று அரசியலில்

ஆயுதமாகிப்போன அவலம்...!

தலைவர்களின் போட்டாபோட்டியால்

தட்டுத்தடுமாறும் பள்ளிகளின் நிலை

இன்று பரிதாபத்தின் உச்சம்...!


சமச்சீரானால் என்ன? சாதாரணமானால் என்ன ?

இது கல்விக்கும் மாணவர்களுக்கும்

இடைப்பட்ட பந்து...!

இப்பந்து அரசியலில் உதைப்பட்டுக்கொண்டிருக்கிறதே ஏன்?


நாடு நலமாகத்தான் உள்ளது....

ஆனால் ,

நாட்டிலுள்ளோர் ?

நடமாடிகொண்டிருக்கின்றனர்...


நாடு எங்கே செல்கிறது என்பதை

தெரிந்து கொள்ள.....!

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஊனம்...


சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளால்

மாற்றுத்திறனாளிகள் என்று

பெயர் மாற்றம் செய்யப்பட்டு

வரும் ஒரு சிசிக்குழந்தை

ஊனம்...!


எங்களின் தாய்தந்தை செய்த

தவற்றினால் நாங்கள்

கருப்பை தவறிவிட்டோம் ...


எக்காலத்தில் செய்த ஊழோ

தெரியவில்லை...

இன்று,

எம் ஊழுடம்பைச் சுற்றி

வாதை கூடாரமிட்டுள்ளது...!


அனாதைகள் அனைவரும்

கடவுளின் குழந்தைகளாம்....

நாங்கள் அனாதைகளல்ல ..

பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத

பிரகஸ்பதிகள்...!


உடல் உறுப்புகள் மட்டுமே

உதிர்ந்துள்ளது எங்களிடம்...

மனவுறுதியை மட்டும்

குன்றம் போல் குவித்திருக்கிறோம்...!


எங்களின் கண்கள்

மனிதனை மனிதனாகத்தான்

பிரதிபலிக்கும் ...

ஆனால் ,

உடலுறுப்புகள் அனைத்தும்

ஒருங்கமைக்கப்பட்ட

மானசீக மனிதங்களின்

பார்வையில் நாங்கள்


"மனிதப் பிறவியெடுத்து

நெளியும் மண்புழு வகையினர்"


எங்களைப் பரிதாபப் படுத்தி

பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....

பழகிவிடும் என் சாதியினருக்கு,

உழைக்கும் வர்க்கத்திடமிருந்து

பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!


ஊனம் என் உடம்பில் மட்டுமே..!

உழைப்பிற்கு இல்லை,

எத்தனை முறை விழுந்தாலும்

எழுந்துகொண்டே இருப்போம் ,

எங்கள் மனவுறுதியை

ஊன்றுகோலாக்கி....!

புதன், 30 மார்ச், 2011

உன் பிறந்த நாள்...!


சுழல்கின்ற பூமியினுள்

சுழலாத சூறாவளியாய்

உன் அன்பு,

சுழற்றி அடிக்கிறது என்னை...!


உன் கண்களின் ஒருநிமிட

சந்திப்பில் என் ஒட்டுமொத்த

உணர்சிக் குருவிகளெல்லாம்

சிறகு முளைத்துப்

பறக்கத் துவங்குகின்றன....!


என் உணர்வுகள்

ஒருங்கிணைந்து

உருவான,

குழந்தை நீ ...!


இன்று,

நீ மகிழ்ந்தால்

உன் பற்களாய் பிறவியுற்று

பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!


துன்பத்தில் உழன்றால் ,

உன் கண்ணீராய்க்

கரைபுரண்டோடி

கவலைகளைக் கரைத்திடுவேன்...!


உன் பிறந்தநாள்

பந்தங்களிடையே

பழகிப்போனாலும்,


ஏனோ

இன்று எனக்கு மட்டும்

புதிதாய்ப் பிறந்த நீ...!

வியாழன், 24 மார்ச், 2011

விடுமுறைக் காதல்...!


கள்ளிச் செடிகளும்
முளைக்கத்தயங்கும்
களர்நிலமான என் இதயம்
நீ கால் பதித்துச் சென்றதும்
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!

உன் கல்லூரி விடுமுறைக்காலம்
என் வாழ்வின் வசந்த காலம்...!
வறண்ட என் பாதையில்
நிதம் தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டாய்....!

உன் விழிகளின் ஓரப்பார்வையோ
என் இரவுகளின் விடியல்களாக
வியாபித்துக் கொண்டிருக்கின்றது...!

விதியின் விளையாட்டால்
என் இதயத்தின் எமனாக
எதிர்வீட்டிலேயே
குடிவந்திட்டாய்...!

முதல் பார்வையிலேயே என்னை
மொத்தமாய் சில்லுடைத்துச்
சிதறச் செய்தாய்...!

உன் பார்வையில் பந்தாகிப்போன
என் இதயம் ,
முட்டிமோதி காற்றிறங்கி
காத்திருந்தது உன் காதலுக்காக...!

இரண்டே நாளில்
மௌன மொழிபேசிய உன் கண்கள்,
ஏனோ தெரியவில்லை
இதழ்ப் பூட்டைமட்டும்
திறந்திட மறுத்தது...!

எத்தனை நாட்கள்தான்
சொல்லாத காதலைச் சுமந்து
கொண்டு திரிவது...?

என் இதயம் உனக்கல்லாது
வேறுயாருக்காவது
நிச்சயிக்கப் பட்டிருக்குமோ
என்ற ஐயத்தில் நின்ற என்னை..,

நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து
இதயத்தைப் பெயர்த்துக் கையோடு
கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!

உண்மை விளங்கவே
ஒருவார காலம் பிடித்த என்
நெஞ்சம் ஊமையாகிக்
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!

திங்கள், 21 மார்ச், 2011

இருள்...!


ஆசான்களின்
அறிவுமுன்னோடியாகி
உலகத்தின் அழகை
எதிரொலிக்கும்
கண்ணாடி-இருள்..!

நிதம் போர்நிகழும்
அந்தப் புட்கரத்தில்
பகலெல்லாம்
ஆதவரசனின் ஆட்சி....!

நேரம் நகர்கையில்
நிர்வாண மேகம்
நாணமுற்று இழுத்துப்
போர்த்தும் பட்டுக்
கம்பளம்-இருள்...!

பட்டுக்கம்பளத்தினைக் கிழித்து
பூமிக் கண்ணாடியில்
முகம் பார்க்கவரும் முழு
இரவுத் தேவதை- நிலா...!

இருட்பாதையில் இங்குமங்கும்
எரிந்து நின்று ஒளிவீசும்
நியான் விளக்குகள்
நட்சத்திரங்கள்...!

இவையனைத்திற்கும்
இடமளித்து இதயத்தைப்
பரிமளித்துக் கொண்டிருக்கும்
வானம்...!

இவற்றிற்கிடையே
இருளில் தொலைந்த
என் தூக்கம்...!

இயற்கையே ...

என் வாழ்வு ஒளிர விழைகிறேன்!
சற்றே ,
உன் இருளைக் கடன் கொடு...
சிந்தித்துவிட்டுத் தருகிறேன்...!!

சனி, 12 மார்ச், 2011

மனதைத் திற....


புதியதாய் புறப்பட்ட தென்றலே
ஏன் புத்துணர்ச்சியற்று
மூலையில் முடங்கிவிட்டாய்?
பூக்களுக்குள் பூகம்பம்
நிகழ்த்த வல்லாயோ ?
மக்களுக்குள் சுவாசம்
அளிக்க வல்லாயோ ?

ம்ம்ம்... புறப்படு....!

உனக்கான பாதை
இன்று வானம்போல்
பரந்து விரிகிறது ...!
மேகத்தில் கால்பதித்து
சூரியனிடம் கைக்கோர்த்திடு...!

கவலையற்ற மனிதர்களிடம்
நட்பு கொள்ளாதே....
அவர்கள் முயற்சியற்ற மூடர்கள்...!
உன் முயற்சிக்கும் முலாம்பூசி
முற்றத்தில் முடக்கிடுவர்...!

பணம்படைத்த பரிதாபங்களுடன்
பந்தம் வைக்காதே....
அவர்கள் தேங்காயை உருட்டும்
நாயினத்தவர்....
உன்னை குறிக்கோளற்ற
கும்மிருட்டுக்குள் புகுத்திடுவர்....!

அகவையற்ற காதலில்
அடிவைத்திடாதே....
உன் கண்முன்னே ,
அற்பங்களனைத்தும்
சொற்பமாய் மின்னி
கண்ணைப் பறிக்கும்....!
அடிவைத்த பாவத்திற்கு
விலையை உன்
கற்பைக்கேட்டிடும்...!

உன் ஆடைமூடிய பாகத்தின் மேல்
அம்புவீசிடும் கண்களை அள்ளிப்
பறித்திட்டுக் குருடாக்கிடு ...
அவனின் மனையாளிடம்கூட
அவன் மோகத்தில் முயங்கக்கூடாது...!

உன் கண்களைச் சந்திக்கும்
கண்களைக்கொண்ட ஆடவர்களுடனே
நட்பு கொண்டிடு....
நேர்மையான மனிதங்களை
நிந்தித்துவிடாதே....!

பெண்களுக்குள்ளே பிரகாசமாய்
ஒளிர்ந்திடு....
அடுக்களைப் பூச்சியாய் அமர்ந்திடாதே...
அப்பாவி என்ற பட்டம்கட்டி
அணைத்திடுவர் உன் திறமைகளை...!

இப்பொழுதும் கூட உன் பாதை
விரிந்துதான் கிடக்கிறது...
சற்றே உன் மனதைத் திற....
மாற்ற வேண்டியதையெல்லாம்
மறுசுழற்சி செய்துவிடு...!

ம்ம்ம்.. புறப்படு...!!!

வெள்ளி, 11 மார்ச், 2011

செய்து விடாதே...


முற்றுப்புள்ளியாய்
நின்ற எனதருகே
மற்றுமொரு புள்ளியாய்
வந்தென் வாழ்விற்கு
ஆரம்ப அடித்தளமிட்டாய்...!

உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

இதுவரை மற்றவர்களுக்கெல்லாம்
நான் சொந்தமாய் இருந்தேன்...
இன்றிலிருந்து எனக்கென்று
எஞ்சி இருக்கும் சொந்தமொன்று
நீ மட்டுமே...!

உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்....!

புதன், 9 மார்ச், 2011

கவிஞன்.


இவன்,
படைத்தல் தொழில்புரியும்
பிரம்மனின் குளோனிங்
செய்யப்பட்ட ஒரு
குழந்தை...!

பூமிப் பந்திற்கு வெளியே
நின்று சிந்திக்கும்
திறனுடைய ஓர்
செயற்கைக்கோள் ...!

இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!

பனுவலில் விதையிட்டு
பூக்களுக்கு வாசம்கொடுத்து
வண்ணத்துப் பூச்சிகளின்
வாய்திறந்து தேனூட்டுவான்...!

காற்றின் கைகளில்
ஏணியிட்டு ஏறி
மணமலர்களுக்கும்
வண்ணம் தீட்டுவான்....!

அச்சமும் நாணமும்
நசிந்து உண்மையை
உணர்ந்தவாறு புணரவைப்பான்...!

அரசியல் துன்பமோ ,
உரசியல் இன்பமோ ,
விதிவிலக்கில்லாமல்
அவனிமேடையில் அரங்கேற்றிடுவான்...!

தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!

இவன்,
கவிஎழுத வயப்படும் போதெல்லாம்
மனைவி ஆயத்தமாகிவிடுவாள்
அணிகலன்களைக் கழற்றித் தர....!

இவன்,
குழந்தை தமிழ் படிக்க
மனைவியின் தாலிக்கொடி
முதற்கொண்டு இந்தி படிக்க வேண்டும்....!

இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...

உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!

ஞாயிறு, 6 மார்ச், 2011

உனக்காகவே ...

ஆளில்லாப் பொட்டல்காட்டில்
அரங்கேற்றம் ஓர் காதல்காதை...!
இரு குருகுகள் முணுமுணுக்கும்
குறுந்தொகைப் பாடல்,

"யாயும் யாயும் யாராகியரோ"என்று....

எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
விளங்க மறுக்கும் புரியாத புதிராய்
உன்மீது என் காதல்...!

என் சகாப்தத்தை
சம்பந்தப்பட்ட உன்னிடமே
சற்றும் விரிக்கமுடியவில்லை
என்னால்...

மற்றவர்களுக்கு மட்டும்
என் காதல் முழுமதியாய்
முகங்காட்டிவிடுமா? என்ன ?

பசிக்கும் தருணமெல்லாம்
உன் நினைவுகளே அடிசிலாகி
என் பசியாற்றிச் செல்கின்றன...!

என்றும் ஊமையாய் உறங்கிய
என் மனம் இன்றிலிருந்து
உறக்கத்தில் உரையாடல்
நிகழ்த்துகிறது உன்னிடம்....

எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள்
புதைத்தாய் என்று...

என் காலம் முழுதும்
உனக்குக் கண்ணாடியாகக்
காத்திருக்கிறேன்...

உன் சிரிப்பையும் சினத்தையும்
உள்ளவாறு பிரதிபலித்திடுவேன்..!
தினம் என்னில் உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்ல
மறந்துவிடாதே!

என் செங்குருதியில் உள்ள
இரு சிவப்பணுக்கள் ஒன்றுகூடும்
போதெல்லாம் தோன்றும்
ஒற்றை நினைவு இனி
நீ மட்டுமே !

உள்ளமுவந்து உறுதியளிக்கிறேன் ...
இனி என் பிறப்பும் இறப்பும்
உனக்காகவே!
புகழும் இகழும் உனக்காகவே!
மகிழ்வும் நெகிழ்வும் உன்னுடனே!

உன் இன்பத்தில் மறைந்திருந்து
துன்பத்தில் துணை நிற்பேன் !

இறைவா!
என் கோரிக்கைஏற்று அருளிடு,
எனக்கான என்னவரை....!

செவ்வாய், 1 மார்ச், 2011

கருணை கசியும் தருணம் !


மதியிழந்த விதிகள் சில
இன்பப்பசிக்கு ஆளான
உடலை களர்நிலமாக்கி ,
வித்திட்ட விதைகளை
முளையிலேயே கிள்ளிக்
குப்பையில் எறியும் கொடூரம்....!

முகிழாத முல்லையைக்
கிள்ளிக் குப்பையில் எறியும்
கோவையரின் கொங்கைகளை
அழன்று செந்தழலில் இட்டாலும்
செய்த பாவத்தினால்
வெந்திடவும் போவதில்லை ...!

குப்பையில் குதித்த
கோமேதகத்தை கையில்
எடுப்போர் அதற்குக்
கர்த்தராகிப் போகிறார்கள்...!

கருப்பையைத் தொலைத்துவிட்ட
நெருப்பைத் தொட்டுத் தூக்கியதும்
சிறு நுதலில் சிதறும் கேள்விக்
கணைகள் நெஞ்சைக் குத்திக்
கிழிக்கின்றன...!

கருப்பை சூன்யமாக்கப்பட்ட
இந்த இன்ப இதிகாசங்களுக்காகவே
இன்னுமாயிரம் தெரசாக்கள்
தெவிட்டாமல் பிறக்கவேண்டும்
இம்மண்ணில் ...!

சமுதாயமே ...
சட்டென்று ஒரு சட்டமியற்று,
"வளர்க்கும் தெம்பிருந்தால்
பெற்றுக்கொள்" என்று...!

வளர்ந்து அழிவது அழகல்ல...
பாவம் அந்தப்பிஞ்சுகள்
கருவிலேயே அழிந்துபோகட்டும்...!
வலி தெரியாமலாவது இறக்கட்டும்...!

அகராதியில் இருந்து நீங்கவேண்டிய
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!

எல்லாம் வல்ல இறைவா...
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !

மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஒரு குழவியின் குரல்...


புவனமெங்கும் பெய்தமழையில்
நாளெல்லாம் நனைந்த
சிறுபுல்லின் மேல் வீற்றிருக்கும்
வெள்பனியைப் போன்றவளவள்...!

மயிலிறகால் வருடினாலும்
கன்னத்தில் இறகின் அச்சு
வார்ந்துவிடும் குழந்தைப் போல
மென்மையான அன்பைக்
கொண்டவளவள்...!

நட்பும் , காதலும் அவளின்
தாய்மைக்கு ஈடுகொடுக்க
இயலாமல் தலைதெறிக்க ஓடும் !

ஏனென்று காரணம் விளங்கவில்லை ,
எனக்கும் உனக்குமான
அன்புக்கால அட்டவணை
என் ஆறுவயதிலேயே
அழிந்துபோனது.....

அணைக்கக் கூட அரவணைப்பற்ற
அன்பர்களெல்லாம் எனக்கு
அயலார்களாகவே தோன்றிய
தருணமது....!

உன் அன்பை எனக்கு
இறந்துதான் உணர்த்தவேண்டும்
என்று நினைத்தாயா ?
காலதேவனின் கைகளில் சிக்கி
என்னை கவலைக்கடலில்
ஆழ்த்திச் சென்றாயே ?

நீ இருந்து நான் பெற்ற
இன்பங்களை விட,
நீ இறந்து நான் பெற்ற
துன்பங்கள் தான்
நெடுந்தூரமாய்ப் பயணிக்கின்றன...

என்னிரவின் தூக்கங்கள்
அனைத்தும் துக்கத்தின்
விளிம்பிலேயே நின்றுகொண்டு
வரமறுத்தன.....

உன் மூச்சுக்காற்றை
சுவாசித்துத் தூங்கும் எனக்கு
தென்றல் காற்று மூச்சுத்
திணறியது...!

தூக்கத்தில் உன் சேலைநுனியைத்
தேடித்திரியும் என் கைகள்
இன்று இருட்டில் தேடித்
துழாவித் துவண்டு போயின....!

நிதம் காலை காக்கைக்குச்
சோறு வைக்கச் சொல்லி எனை
வற்புறுத்துகின்றனர் .....

என்னால் மட்டும் உனை
எந்த உயிர்களோடும்
ஒப்புமைப்படுத்த முடியவில்லை....!

தினம் இரவில்
வானத்தைப் பார்த்தே
கண் அயர்கிறேன் ...

நீ நிலவாக வருவாயா?
மேகமாக விரிவாயா ?
விண்மீனாய் திரிவாயா ?
என்ற ஏக்கத்தில்.....

அம்மா .....
என் நினைவுதெரிந்து
உன்னிடம் கேட்கும் முதல்
ஆசை இது...

இப்பிறப்பில் எனக்கு
மகளாகவாவது பிறந்துவிடு....!

சனி, 26 பிப்ரவரி, 2011

விடியலைத் தேடி.....


என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!

இனிவருங்காலங்களில்
எல்லாம் "தமிழன்"என்றசொல்
வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமோ
என்ற கலக்கத்தினாலே இன்று
என் ஊமை மௌனத்தை
உடைத்துக்கொண்டு உங்களுடன்
பேசுகிறேன்!

ஆயிரம் கோடி தலைவர்கள்
அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த
சுதந்திரத்தீயை நாம்
கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் ஊற்றி அணைத்துவருகிறோம்!

கடலில் கூட கரைகளிட்டுகொண்டு
சிங்கள இராணுவத்தினர்
சுட்டுக் குவிக்கின்றனர்
நம் தமிழர்களை....

நேற்றுப் போன கணவன்
வருவானா?
இன்று போன இளவல்
வருவானா ? என்று
எதிர்ப்பார்த்தே பெண்களின்
கண்களில் பசலைப் பூத்துவிட்டது !

அவரவர் மொழிகளை அவரவர்
பாதுகாக்கின்றனர் !
இந்தி மொழியரிடம் கடிதம்
எழுதக்கேட்டால் இந்தியில்தான்
எழுதுகிறான்...

நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !

இன்று எதிர்பார்த்த உலகம்
வரவில்லையென சோர்வடையும் நீ ,
உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
ஊமையாகி ஓடுவது ஏன்?

மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மறவன்
மகா உன்னத வரலாற்றில்
வளம்பெற்றான்...!

இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!

தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!
மூழ்கிய கப்பலில் முயன்றளவு
நீந்திப் பழகுவோம் !
தினம் உதிக்கும் சூரியனோடு
சிநேகம் செய்வோம் !
அவனோடு சேர்ந்து நாமும்
உதித்து ,
புதியதோர் விடியலைத் தேடித்
பயணம் செய்குவோம் !

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நாண மொழி..!


பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!

பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...

இதழ் மறுத்துக்
கண்கள் சிரிக்கும்
ஓர் மாய இன்பம்!
ஏற்றுக்கொள்கிறேன்....

ஆனால் என்னிடம் மட்டும்
ஏன் நொடிக்கொருமுறை
வீசிக்கொண்டே இருக்கிறாய் ?
உன் நாண மொழிகளை???

உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல்
எதற்காக காதோரத்தில்
ஓரிரு முடியை மட்டும்
சுற்றி விட்டு என் நெஞ்சை
நஞ்சால் தைக்கிறாய்??

நிலா உலாவும் வான் வீதியா
உன் நெற்றி ?
ஒரே சுருக்கத்தில் எனை
மடித்து மடக்கிவிட்டாயே ?

உன் கண்கள் இரண்டும்
மீன்களா என்ன ?
என் இதயத்தைப்
புழுவாக்கித் தூண்டிலில்
கட்டி நீரினுள் விட்டதும்
சட்டென்று இழுத்துவிட்டது ?

உன் கண்களில் வழியும்
கண்ணீரா நான்?
பன்னீர் போல் உன்
கன்னக்குழியில் தேக்கிவைத்து
நீந்துகிறாயே?

அப்படி என்ன பாவம் செய்தேன் ?
நான் சுவாசிக்க வேண்டிய
காற்றை உன் நாசி
திருடிச் செல்கிறது?

உன் காதணிக்கு என்
இதழோடு என்ன வேலை ?
எப்போது பார்த்தாலும்
என் இதழ் உச்சரிப்பிலேயே
ஊஞ்சல் ஆடுகிறது ?

உன் இதழ்கள் இரண்டும்
மதுபானம் அருந்திவிட்டதா?
சற்று நேரத்தில் என்னை
உன்னில் வீழ்த்திவிட்டதே ?

உன் முகம் ரோஜா மலரோ ?
முகப்பருக்கள் அனைத்தையும்
பனித்துளி என்றிண்ணி
சேர்த்து வைத்திருக்கிறது ?

காற்றில் கதைபேசும்
உன் கைகள் இரண்டும்
இப்போது என்னை
விலைபேசுகின்றன,
உன் இதயத்திற்காக ....

இத்தனையாண்டுகளாய்
நான் என் நிழலோடுதான்
பயணித்தேன் !
நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !
தெரியாமல் தான் கேட்கிறேன்
ஏன் என்னை இம்சிக்கிறாய் ?

என் நிழலாய் வரும்
உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?
புரியவில்லையடி....!

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முதிர்க்கன்னி...


மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து
நான்!

நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும் ,
ஒரு நெல்லுமணியும்....!
அடுத்ததாகப் பிறப்பான்
ஒரு ஆண் சிங்கமென
மூன்றும் பெட்டைக் கோழிகளாக
பெற்றெடுத்தவர்கள் ,
தலைச்சம்பிள்ளை தரித்திரம்
என்றென்னை ஏசிவிட்டு
நாளும் ஆறுதலடைந்தனர்...!
என் குடும்பத்தின் பசிக்காகப்
பத்தாம் வுகுப்பைக் கூட
பாதியில் விட்டுவிட்டுப்
பழைய சோறாகிவிட்டேன்...!
என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!

ம்ம்ம்... நின்றென்ன பயன் ?
மதகுடைத்த என் வயது
மணாளனை மறுதலிக்கச் செய்கிறதே?
மாற்றியமைக்கக் கூட மனதில்லாமல்
மத்தள ஓசைக்கு ஏங்கி நிற்கின்றேன்...!

மத்தளத்திற்கு பதில் சிலர்
மெத்தனத்தால் கைக்கொட்டும்
ஒசையல்லவா என் காதில்
விழுகிறது....??

பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...!

எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!

சிலந்தி வாயில் சிக்கய பூச்சியாய் ,
உடலைக்கொடுத்து உயிரைக்காக்க
திராணியற்று நிற்கின்றேன்...!

என்னைப் போன்று இன்னும்
எத்தனை அன்றில் பறவைகள்
வாழ்க்கைப் பெருங்கடலைப்
பாராமல்,
வீட்டு முற்றத்தடி நீரில்
நீந்திக்கொண்டிருக்கின்றனவோ ?
தெரியவில்லை...!

கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....

புதன், 23 பிப்ரவரி, 2011

பயணம் புதிது!


காதல்,
புரிதலில் மட்டுமே
இன்பம் காணும்
குழந்தை!

இருட்டுப் பாதையில்
பழகாத பாதங்கொண்டு
பயணிக்கும் இரு
விண்மீன்களின்
ஒளிவிளக்கு!

மன்றல் புரியா
இரு தென்றல்கள்,
மழை நனைக்க
குடை நனைய
குளிர்காய்ந்து வந்த
நெஞ்சங்கள் மட்டும்
நெடுந்தூரப் பயணமாய்....

இருளைப் பிளந்து
பாதை போடும்
நம் விழிகளுக்கு
வெளிச்சம் நல்கிய
நியான் விளக்குகளிடமும்
சினேகம் உயிர்க்கிறது!

அன்பு மீதூரப் பெற்று
அரவணைத்துக் கொண்ட
என்னுடல் இங்கே...
சொல்லிவிடு,
உனைக்கேட்காது
எங்கும் செல்லாத
என் உணர்வு எங்கே என்று...!

ஊரே அஸ்தமனமான
அரைப்பொழுதில் ,
எனக்கு மட்டும்
உதயமான உன்கனவு
என் இமைகளின் இடுக்குகளில்...

காத தூரம் சென்றாலும்
கால்வலிக்காத பயணம்
உன் தோளோடு சாய்ந்து
செல்கையில்....

சற்றே பொறுத்துக்கொள் !
வாழ்வு முழுவதும்
அடிமைச்சாசனம்
எழுதித்தருகிறேன்!

உன் அன்புச் சாலையில்
என்றும் பயணிக்க....!

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

எச்சில் ராணிகள்...


இருட்டைப் பூசிப் பகட்டாய்
ஜொலிக்கும் விடுதிகளான
விலைமாதர்கள் விற்றுப்போன
உடலை நிதம் தூக்கித்திரியும்
பரிதாபம்!

மனையகன்று வெளிவரும்
தலைவன் ஒருத்தனுக்கு
மட்டும் பரத்தையாக
வாழ்ந்த எம் முன்னோர்கள்
இன்றிருந்தால் எங்களை
இப்பாவத்தில் விழவிடாமல்
தீயிலிட்டுப் பொசித்திருப்பர்....

நாங்கள் இரவில் நிர்வாணமாக
உழைத்தால்தான் கிழிசலற்று
பகலில் உடுத்த ஆடை
வாங்க வசதியாவோம் !

காமக் குரோதிகள் உமிழ்ந்த
எச்சில் மட்டுமே எங்களின்
இலையைக் கழுவத் தெளிக்கும்
முதல் தண்ணீராய் போனது...

தெருநாயைக் காணும்
கண்களை வைத்து எங்களைப்
பார்க்கும் குடும்ப விளக்குகளைப்
பார்த்தால்தான் மானவெட்கமனைத்தும்
காரித் துப்புகிறது எங்களை...

என்ன செய்வது?
காம ஜடங்களின் கைகளில்
சிக்காமல், குடும்பவிளக்குகளனைத்தும்
கற்போடு இருக்க வேண்டி ,
நாங்கள் திரியாகி கற்பில்
தீக்குளிக்கிறோம்!

எங்களை ஏசும் சமுதாயம்
ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம்
பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...

நாட்டின் நியாயதர்மங்களனைத்தும்
நகையாடித் திரிகின்றன...
என்ன செய்வது?
நகைப்பிற்கிடமாக வாழ்க்கைப்பட்ட
எங்களின் வாழ்வு வழியற்றுப்
போனதே!

கல்விப் பணியில் பல்கலைக்கழகம்,
படித்த மாணவர்களுக்கே
பட்டமளிப்பு விழா!
பல்கலைக்கழகம் மட்டும் பார்த்த
கண்ணிற்கு அழும்பில்லாமல்
அப்படியே இருக்கும்!
ம்ம்ம்...
நாங்களும் பல்கலைக்கழகம்தான்,
சற்றே வித்தியாசம் ....
எங்களிடம் படுத்தவர்களை விடுத்து
கழகத்திற்குப் பட்டமளிப்பு விழாநடத்தி
"விபச்சாரி" என்ற பட்டமளிக்கும்
பொதுமக்கள்.....

காமப் புண்கள் அனைத்தும்
உமிழ்ந்து உறிஞ்சி எங்களை
எச்சில் ராணிகளாக்கிவிட்ட
சூழ்நிலையில் கண்ணாடிமுன்
நிற்கக்கூட கூச்சமாக உள்ளது....

வருங்காலங்களில் ,
குப்பாய்க் கள்ளர்கள் அனைவரும்
கோவலன்களாகிவிட்டால்
நாங்களும் கறைபடியா
கண்ணகிகளாக ஒளிர்விடுவோம்!

வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாழ்வின் அத்தியாயம்


அழகிய திருமணத்தில்
அன்பான இரு மனங்களின்
சங்கமம்!

நம் வாழ்க்கையின்
அத்தியாயம் ஆரம்பமாகும்
தருணமிது !

விரியும் அதிகாலைப்பொழுது,
திரியும் குயிற்க்கூட்டங்கள்
இருட்கதவைத் திறக்கும் சூரியக்கைகள்,
இடக்கை தேநீர்க்கோப்பை தாங்க ,
வலக்கை உன் தாள் பற்ற ,
எந்தச் சகுனமும் பாராது,
என்விழிகளை நோக்கும் உன்விழிகள்......

பன்னீரால் ஆனதொரு வெந்நீர் ,
சுகந்தம் வீசும் சவர்க்காரக்கட்டி ,
உதவவரும் என் கரங்கள்
உபயோகமற்றுப் போக,
உன் குளியலில் நனையும் நான் ....

இரவின் நிலவு நிலைத்திருக்க ,
சன்னலில் வீசும் சாமரத்தை
சலனமின்றி சுவாசிக்க உன்
நெஞ்சில் என் தலைசாய்க்கும்
உன் கைகள்.....

வாரம் ஒருமுறை கடற்கரைப்பயணம் ,
கலைந்த உன் தலையைக்கோத
விரையும் என் விரல்,
குளித்த உன் தலைதுவட்ட
என் சேலைநுனி ,
உன் தலை உதிர்த்த தண்ணீர்
என் தாகம்,
என்னிதழீரம் துடைக்க உன்சட்டையின்
கழுத்துப்பட்டை.....
இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....

பாசப்பிணைப்பால் பசியற்ற வயிறு,
பழகாத என் சமையல் ,
ரசித்துப் பரிமாற நான்,
புசித்துப் பசியாற நாம்....

ஆயிரம் வேலையுடன் என் அடுக்களை,
அவசர வேலைகளில் உன் அலுவலகம்,
அலுக்காமல் அன்பைப் பரிமாற
ஆசையாய் தினமொரு முத்தம்....

இதுபோதும் என் வாழ்விற்கு !
என்றும் ,
வளம் சேர்ப்பேன் உன் வாழ்விற்கு !

நிலவு


நிலவு,
இரவுத் தூரிகை கொண்டு
மேகம் தீட்டிய ஓவியம்!
திறந்த வானில்
நிர்வாணமாகத் திரியும்
தேவதைக்குழந்தை!

கரைந்துருகி
பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன்
வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?

முதல் பிறையோ ,
வெட்கம் உடைய
விருட்டென்று
தலைகாட்டும்
வெள்ளிப் பிழம்பு!
வான் குழவியின்
வாயில் விழுந்தெழும்
முதல் எயிறு!

மூன்றாம் பிறையோ,
மனித வாழ்க்கைப்பட்டவன்
வாழ்வில் அவசியமாகக்
காணவேண்டிய அழகோவியம்!

மனித வாழ்வியல்
உண்மைகளை
உறைந்துரித்தொழுகும்
உயிரோவியம்!

ஒருநாள் மட்டும்
கறைபடியா கண்ணகி..!

முழுநிலவோ ,
கடற்கரையோரங்களில்
நிற்கும் தருக்களை
கண்சிமிட்டாமல்
மலைக்க வைக்கும்
திரிலோகரம்பை !

மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !

பலவாறு பாடிப்போந்த
பல்லாயிரம் கவிஞர்களுக்கு
வர்ணிக்க வார்த்தையளித்த நீ
எனக்கு மட்டும் புயல்வந்த
வனமாய் காட்சியளிப்பது ஏன்?

எப்போதும் உன்னை என்வீட்டுக்
கிணற்றில் சிறைபிடிக்கிறேன் ,
என்றும் நில்லாயோ ?
நிலவஞ்சியே !!!

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

புன்னகை.!


புன்னகை,

ஐந்தறிவு அத்தியாத்திலிருந்து
ஆறாம் அறிவுக்குப் பாலமிட்டு
பயணிக்கும் ஓர் பகுத்தாளி!
மிருகங்களில் இருந்து விடுபட்ட
மனிதங்களின் ஆயுட்கால
அடையாள அட்டை!

அனுமதியில்லாது அனைவரிடத்திலும்
எடுக்கவும் கொடுக்கவும்
இறைவனால் நியமிக்கப்பட்ட
அசையாச் சொத்து !

இதழ்ப் பூட்டைத் திறக்கும்
இன்னிசைத் திறவுகோல்...
மரணத்தையே மறுதலிக்கப்
புறப்பட்டுவந்த மன்மத பாணம்!

விதவிதமான வண்ணவகைகளில்
சிரிப்புகளனைத்தும் சில்லுடைந்து
நம் முகங்களில் விலாசவில்லைகளை
ஒட்டிவிட்டுச் செல்கின்றன...

புன்னகை பொதுவான ஒன்றுதான்
அதை புசிப்பவன்தான் சூழ்நிலைக்கு
ஏற்றவாறு சுருட்டிக் கொள்கிறான்!
மனமகிழ்வோடு விதைக்கின்ற
புன்னகை, ஆயுட்காலம் வரை
அறுவடையாகிக் கொண்டே இருக்கும் !
பிறர் ஏழ்மையில் ஏதுவாய்
எள்ளி நகையாடும் சூன்யங்கள்
எவ்வளவு விதைத்தாலும்
களர்நிலமாகிப் போகும்!

செடிகொடிகள் சிரிக்காவிட்டால்
மலர்கள் மனம் வீசாது....
மனிதங்கள் சிரிக்கமறந்தால்
மாசு மனம் தூசு போகாது !

உயிர்களே !
உங்கள் இதழ்களில்
ஒருநாளைக்கு ஒருமுறையேனும்
புன்னகைப் பூவை
பிரசவித்துவிடுங்கள் !

உங்களின் ஆயுளில் இனாமாக
ஒருநிமிடம் வந்து ஒட்டிக்கொள்ளும் !

வியாழன், 10 பிப்ரவரி, 2011

அம்மா என்றழை !


பாலுக்காகப் பசித்தழும்
பச்சிளங்குழந்தை போல்
உன் அன்பிற்காக ஏங்கியழும்
பேரிளங்குழந்தை நான்!

உன்னை சூல் கொண்ட
கருப்பை இன்று கதறியழுகிறது !
கட்டியவனிருந்தால் இன்று
கால்வயிற்றுக் கஞ்சியாவது
கண்ணீரில்லாமல் குடித்திருக்கலாம் !
ம்ம்ம்... விதியின் சதி,
எனக்கு முன்னாலவன் இறந்து
புண்ணியம் கட்டிக் கொண்டான்...

என்குழவியே !
இன்றும் உன்னை மனமார
வாழ்த்துகிறேன்! எனக்கு ,
உலக உண்மைகளை
உணரவைத்ததர்க்காக ....

நில்லா அன்பையும்
நிலையான பண்பையும்
நிர்பந்தப் படுத்திகூறும்
உன் கண்களில், நானில்லாத்
தருணங்களில் தான்
மகிழ்வுக் குருவிகள்
சிறகடிக்கின்றன......!

அன்றென் கைவிரல் பிடித்து
நடந்த நீ,
இன்றென் பக்கம் நிற்கக்கூட
பலமுறை யோசிக்கிறாய்....
ம்ம்ம்.. உன்முன் காலம் என்னைத்
தீண்டத் தகாதவளாய் ஆக்கிவிட்டது !
உன் தந்தை மறைவின் பின்
அன்பு இல்லத்தில் கூட விட
மறுத்தேன் உன்னை...
இன்றோ , நான் முதியோர் இல்லத்தில்
கூட சேராத் தகுதியுடையவளாய்
நிற்கின்றேன் உன்னால்....

முன்பெல்லாம் சிறுதுன்பம்
வந்தாலும் நெஞ்சம் நெக்குருகும் ,
இன்று, கடலளவு துன்பம் வந்தாலும்
என் இதயத்தில் பனித்துளியாய்ப்
பட்டுச் சிதறுகிறது....
ம்ம்..அவற்றிக்கு நீ கொடுத்த
சன்மானத்திற்கு நிகராக
நிற்கக்கூட முடியவில்லையாம்....

அடிக்கடி அழுவதால்
என் முகமே எனக்கு மறந்துவிட்டது...
இன்னமும் கண்களின் ஓரம்
கண்ணீராய் கசிந்து கொண்டிருக்கிறது,
கற்பனை மட்டுமே பொய்யாக
நீ என்னிடம் அன்பு வைத்திருக்கிறாய் என்று...

ஆறுதலுக்காகவாவது ஒரு முறை
அழை என்னை
"அம்மா" என்று ...!

புதன், 9 பிப்ரவரி, 2011

பிரிவோம்! சந்திப்போம்!


மேற்கு வானம் சிவந்து
கடலிடம் கசிந்துருகுவதுபோல்
நானும் உருகிக் கரைகிறேன்
உன் அன்பில் மொத்தமாக.....

நிழல்கள் இரண்டும் கூடி
நிஜமொன்றாய் ஆவது,
நீயின்றித் தவிக்கும் என்னை
இருகூறாய்ப் பிளப்பதற்கே !

கடல் நீரில் உப்பைப் பிரித்தெடுக்கும்
சோதனையே உன்னை என்னிடம்
பிரித்தெடுக்கும் முயற்சி!

ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்
செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல் உன் அன்பைத்
தேடி ஆற்றுப்படும் !

இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....

நாளை அழிந்தழுகும் இந்த
உடலுக்கு மட்டுமே
பிரிவுப் பாலம் கட்டமுடியும்!
மதகுடைத்துக் கொண்டுவரும்
காதலுக்குப் பெருங் காற்றும்
கனலும் என்ன செய்துவிடும் ?

மறையும் சூரியனின் பிரியும்
இதயம் , நாளை
மீண்டும் உதயமாவதற்கே !
விதிவழி வந்த நம் இன்றைய பிரிவு
சதியுடைத்துச் சந்திக்கும் நம்
நாளைய பொழுதிற்க்காகவே!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உதிர்ந்த பூவின் ஓலம் !


அனுப்புனர்:
அம்மா (எ ) அவலை,
பத்துமாதம் சுமந்த
கருப்பை ஒன்றே
முகவரி.
பெறுநர்:
என் குழந்தை,
விதியின் விளையாட்டால்
விலாசம் தொலைந்தது ....
பொருள்:
என் மன ஆறுதலுக்காக மட்டுமே...!
என் இளவலே !
உன்னை பத்துமாதம் பிரிந்திருக்க
சிரமப்பட்டு எட்டாம் மாதத்திலேயே
ஈன்றெடுத்த இளவஞ்சி நான் !

அந்தச் சிசுச்சிறையிலும் உனக்குச்
சிங்கார மகுடம் சூட்டித்
தங்காசனதில் வைத்துச்
சித்தரித்தேன்!

அரைநிமிடம் கூட பிரியாமல்
உன் அழுகையைக் கூட
ரசித்திருப்பேன் !

உன் பூவிழிகளின் தூக்கத்திற்காக
தொலைந்த என் தூக்கங்கள்
ஒருநாளும் ஓலமிட்டதில்லை!

உன் பொற்பாதம் இம்மண்ணில் பட,
வெயிலுக்குப் பயந்து என்
உடலையே நிழலாக்கி
நின்றேன் !

இவற்றையெல்லாம் என்னைத்
தொலைக்கும் தருவாயிலாவது
சிந்தித்திருக்கலாமல்லவா ?

திருவிழாவில் தெரியாமல்
காணாமற்போகும்
குழந்தையா நான் ?
என்னைத் தெரிந்தே
தொலைத்து விட்டுச் சென்றாயே ?

உன் வீட்டில் தான் நானிருக்க
இடமில்லாமற் போயிற்று ,
உன் மனத்திலாவது
அளித்திருக்கலாமல்லவா ?

மூன்று நாட்கள் முட்டிமோதி
தேம்பித் திரிந்த என்னைக்
கண்ணில் கண்டோர் ,
காவல் துறையிடம்
ஒப்படைத்தனர்.....

விசாரணையில் அனாதையாய்
அறிமுகமான நான் இந்த
முதியோர் இல்லத்தில் அறிமுகமாகி ,
இன்றோடு மூன்றாண்டுகள்
ஆகிவிட்டது....!

ஆனால் ,
உன்னை இவ்வுலகில்
அறிமுகம் செய்த என்னை
அறியக்கூட மனமற்று இருக்கும்
உனக்கு ,
இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!

இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!



சனி, 5 பிப்ரவரி, 2011

இதயத்தோடு இதமாக ....


வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம்
மிதக்க, இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு
காதல்!

அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....

கண்கள் மூடி கவிதையை
ஆரம்பித்தால் , எழுத்துக்களனைத்தும்
பஞ்சம் பாடுகின்றன ! என்னிடம்
உன் பெயரைமட்டும் விடுத்தோடுகின்றன!
நினைவுகளுக்கும் கடிவாளமிட்டுக்
களைத்துப்போனேன் !
நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!

என் கேள்விக்கணைகள் அனைத்தும்
உன் விடை நாணில்ஏறி வலம்வர
காலம் முழுதும் காத்திருக்கின்றன....!
நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன

என் இதயத்தோடு......!

புதன், 2 பிப்ரவரி, 2011

மாணவ ஒழுக்கம் !


உலக உயிர்களின்
வாழ்க்கைப் பூட்டை
ஒளியைத் திறக்க உதவும்
திறவுகோல்- ஒழுக்கம்!
ஊசியின் காதிலே
உலகத்தைத் திணிக்க
உருவாகும் முயற்சியின்
முதுகெலும்புகள் -
மாணவர்கள் !

அன்பான ஆசிரியர்களோ
தன்னலம் பாராது ,
உன்நலம் காக்க
தரணியில் அவதரித்த
பூரண பிரம்மாக்கள் !

உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!

வள்ளுவன் தன வாய்மொழியில்
ஒழுக்கம் தரும் விழுப்பத்தினை
உற்றுணர்ந்து உய்ய வழிதேடுவோம்!
பையப் பலகல்விதான் கற்று
சுற்றும் வாழ்வைப் பற்றிக்கொள்வோம் !

ஒழுக்கத்தின் முதல்படியான கீழ்ப்படியை
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!

"மாணவர்களால் மானம் பெற்றது உலகம் "
என்று மார்தட்டுவோம் !

திங்கள், 31 ஜனவரி, 2011

உன் கைகளில் ....


ஈராயிரம் யுகமான
என்னிருபது நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிரைக் குடித்துக்
கொண்டிருக்கின்றன.....

புகைப்படத்தில் புன்னகைத்த
உன்னை யார்க்கும் தெரியாமல்
களவாட வைத்தது
உன் புன்னகை.....
காத்துக் கொண்டே இருக்கின்றேன்
காரணமில்லாமல்....
அலுவலகத் தொலைபேசி
அழைத்தாலும் நீயாக இருப்பாயோ
என்றெடுத்து ஏமார்ந்தும் போகிறேன்....!

பேச நேரமற்று நீயிருக்க ,
பேசுவதற்கென்றே நேரம்
ஒதுக்கக் காத்திருக்கின்றேன்
காரணமில்லாமல்.....

நிச்சயத்தன்று உன்னிதழ்
சிந்திய இன்சொற்கள் தான்
இன்றென் நினைவுப் பசிக்கு
உணவளித்து வருகின்றன....

எந்நேரமும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் கைகளை உன் கைகளில்
தாரைவார்த்துக் கொடுக்கும்
தருணத்திற்காக .......!

சனி, 29 ஜனவரி, 2011

நம் மணநாள் காண...!

ஆயிரம் காலத்துப் பயிரை
ஒரே வாரத்தில் அறுவடை செய்ய
நிகழ்த்தப்படும் திருவிழா ,
பெண்பார்க்கும்படலம்...!

சொந்தங்கள் புடைசூழ
சுளிக்கும் உம் புன்னகையும்
வியர்த்த உம் பாதங்களும்
என் வாசலில் வியாபித்திருக்க ,
"மாப்பிள்ளை வந்தாராம்"
என்றென் தங்கை ஓடிவர,
தடதடவென்று தடுமாறிப்போனேன் !

அதுவரை இருந்த தைரியம்
அப்போதே கரையத்
தொடங்கிவிட்டது !

இனம்புரியாத நாணம்
இன்றோடு என் கண்களைப்
பூட்டித் திறவுகோலை
உம் கைகளில் திணித்தது !

முதல் முறை புடவை என்
முகத்தையே மாற்றியது ...
நேற்றிருந்த தாவணியும்
சல்வாரும் தலைமறைவாயின ....

உதறிய பாதத்தோடு
உங்களின் முன் உட்காருகையில்
உச்சி வியர்த்து மூச்சுத் திணறிப்
போய்விட்டது....

இருமுறைதான் உரசி இருக்கும்
நம் கண்கள் ,
இருநூறு முறையாயினும்
என் தோழியிடம் பகிர்ந்து
கொண்டிருந்திருப்பேன்
அந்நிகழ்வை ....!

இறைவனின் ஒப்பந்தப்படி
இருமனங்களின் மணத்திற்கான
அஸ்திவாரம்....
நமக்கு நிச்சயதார்த்தம் !
வெகுநாட்களாய் மௌனித்த
என் மகிழ்ச்சித் துணுக்குகள்
உம் வரிசைக்கேள்விகளால்
நிரம்பி கரைபுரண்டு
களித்திருந்தன.....

கேலிப் பேச்சுக்களும்
கிண்டல் ஏச்சுக்களும்
நிறைந்த சபையில்
உங்களின் வெட்கம் ஒரு
மார்க்கமாகவே இருந்தது
எனக்கு.....!

நீங்கள் ஊட்டிய இனிப்பை
இனிப்பை இன்றளவும்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
உங்களின் நினைவுகளோடு
சேர்த்து....!

ஒரே நாளில் என் துக்கங்களோடு
தூக்கத்தையும் களவாடிச்
சென்றவரே....
உங்களுக்காகக் காத்திருந்த
என்னிருபது வருடங்கள்
இம்மூன்று மாத இடைவெளியில்
தோற்று நிற்கின்றன....!

தனியே பேசுகிறேன் என்று
வீட்டில் அனைவரும் கேலிப்
பேசுகிறார்கள்....
ம்ம்ம் .. அவர்களுக்கு தெரியாது
நான் உங்களிடம் தான்
பேசிக்கொண்டிருக்கிறேன் என்று....!

செய்வதறியாது என் நினைவுகள்
உங்களின் நினைவுகளைச் சுமந்து
தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றன ,
நம் மணநாள் காண...!

வியாழன், 13 ஜனவரி, 2011

பட்டாம்பூச்சி.....


இளவயதில் சிறகுகள் வெட்டப்படா
இளங்கிளியாய் விண்ணில்
சுற்றித் திரிந்தேன்...!
பச்சிளங்குழந்தையில்
பால்குடிக்கும்போது
அம்மாவின் அரவணைப்பு...!
தினம்தேடி நிதம் பால்சோறு
தின்கையில் இரவல்நிலாவின்
இதமான அரவணைப்பு ...!
பள்ளிப்பருவத்தில் பால்ய
சிநேகிதர்களுடன் பகட்டாய்
விளையாட்டு....!
கல்லூரியில் கலாட்டா
நண்பர்களின் காற்றோட்டம் ..
காற்றில் பறந்தபடியே
காதலில் மிதந்தேன்...!
கல்லூரி முடிந்ததும் கற்பனை
வாழ்வை மெச்சிய என் கால்கள்,
பணியில் பாய்ந்ததும் ,
சொந்தக்கால்களில் நிற்கத் துடித்தன.....

ஆறுமாதம் கழிந்ததும் என் காதல்
செழிந்ததும் வியப்பின் விட்டம்....!
ஊதியம் ஒருநாளும் சென்றதில்லை
என் அம்மாவின் கைகளில்...
ஊதியப் பாதி என் அலங்காரமும்,
மீதி அவனின் சிங்காரமுமென
சிதைந்தது...

காலம் கடந்த என் காதல்
கற்பை இழந்துவிட்டு
நிற்கதியாய் நின்றது
அவனிடத்தில்.....
வழித்தீர வருவான் என்றெண்ணிக்
காத்துக் கிடந்த என் கண்கள்
கண்ணீர்க் குளமாகிற்று....
மாதம் கடந்ததும் கால்கள் இரண்டும்
திசையற்றுத் தடுமாறின,
எனக்குள் இன்னொரு பாரம் தாங்காமல்.....
அழுத என்னை ஆத்திரத்தில்
எழுந்த அன்னை அடித்தே விட்டார்....
என்ன செய்வது????
அப்போதுகூட அம்மா .... என்று தான்
அழுதேன்!

என்னிருபது வயதில்தான்
மூளைக்குள் பறந்தது பட்டாம்பூச்சி ,
"பெற்றோர்கள் பிடற்றுவதைக்
கேட்டிருக்கலாமே " என்று....!

புதன், 12 ஜனவரி, 2011

தேர்தல் .....


தேர்தல் ,
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் பிழைப்போரால்
அமோகமாக நிகழ்த்தப்படும்
உரிமைத் திருவிழா ....
சாலைகள் தோறும்
ஒலிப்பெருக்கியின் ஓலங்கள்...
வீதிகள் தோறும்
வண்ணத் தோரணங்களின்
சாரங்கள்....

பொதுமக்கள் அனைவரும்
உறவினர்கள் ஆகும்
உலகச் சமாதானதினம் !

வாக்குறுதிப் பள்ளம்
வழிந்து நிரம்பும் , தலைவர்களின்
போதை மிகுதியால்.....

விழாவில் கூடும் சந்தையில்
விற்கும் பொருளாக
வாக்குச்சீட்டு .....

நாளை இறக்கும் கிழவிக்கும்
வாக்குரிமை....
வாக்குச்சாவடிவரைப் பறக்கும்
ஆட்டோக்களுக்கு அன்று
அமோக சவாரிகள்...

ம்ம்ம்...
அற்ப மானிடனுக்குத் தெரியாது
ஓட்டைப் பெற்றுக் கொண்டு
(திரு)ஓட்டைக் கொடுப்பார்களென்று !

தன் ஐந்தாண்டு ஆயுளை
வெறும் ஐந்நூற்றுக்கு விற்றுவிட்டு
அல்லல்படும் அவர்களுக்கு
தேர்தல் ஓர் திருவிழாதான்!

வாக்காளனே ! தேர்தல் ,
தோரணங்கள் கட்ட கோவில் திருவிழாவா ?
புத்தாடை அணிய பொங்கல்தீபாவளியா ?
உன் ஐந்தாண்டு ஆயுளை விற்க ,
தலைவர்கள் எமதூதர்களா ?

உன் ஆறாம் அறிவு
அனாதையாய்க் கிடக்கின்றது ....
அதற்குத் தேர்தலன்று மட்டுமாவது
ஆதரவுகொடு......!

செவ்வாய், 11 ஜனவரி, 2011

நினைவுகள் .....!


என் கால்கள் இரண்டும்
கனவில் கூட கண்டிராத
ஓர் பசுமை உலகம் !
நீண்ட ஒற்றையடிப் பாதையில்
கால்கள் செல்ல மனம்
முற்படுகிறது....
கால்களோ பாதிதூரப்
பயணத்திற்குப் பிறகு
பாட்டைப் பாடுகிறது...
இன்னும் சிறிது தூரம்
சென்றதும் சுவாசிக்க
மறந்தேன் நச்சுக்கற்றை....

மணங்கமழும் மண்வாசத்
தென்றல் என் மன்றலுக்குப்
பந்தல் ஊன்ற காத்திருந்தன....
பசுமைப் பாரின் உள்ளே
கால்வைத்ததும் ,
குயில் பாணனின் வரவேற்புரை....

கெஞ்சிய கால்களுக்கு
மிஞ்சிய நேரத்தில்
ஓய்வளிதேன்....

என் எதிரே இரு
அணிற் பிள்ளைகள்
அமுதாய்த் துள்ளிக்குதித்து
விளையாடின ....

அதன் பின்னே பதுங்கிய பூனை
பதறாமல் அடுத்த அடி வைத்து,
தன் அடிவயிற்றுபசிக்காக !
ஓசையை கேட்டதும்
ஓசையின்றி மறைந்தன இரண்டும்...
கொதித்துப் போன பூனை,
குதித்துத் தாவியோடியபோது
புல்லின் மீதிருந்த பனித்துளி
என் கண்களில் தஞ்சம்புக ,

துடைத்துத் திறந்ததும் ,
கண்டிப்பான என் அம்மா
கனத்த குரலில்....

"பள்ளிக்கு நேரமாச்சி எழுந்திரு"
என்று .....!