செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

எச்சில் ராணிகள்...


இருட்டைப் பூசிப் பகட்டாய்
ஜொலிக்கும் விடுதிகளான
விலைமாதர்கள் விற்றுப்போன
உடலை நிதம் தூக்கித்திரியும்
பரிதாபம்!

மனையகன்று வெளிவரும்
தலைவன் ஒருத்தனுக்கு
மட்டும் பரத்தையாக
வாழ்ந்த எம் முன்னோர்கள்
இன்றிருந்தால் எங்களை
இப்பாவத்தில் விழவிடாமல்
தீயிலிட்டுப் பொசித்திருப்பர்....

நாங்கள் இரவில் நிர்வாணமாக
உழைத்தால்தான் கிழிசலற்று
பகலில் உடுத்த ஆடை
வாங்க வசதியாவோம் !

காமக் குரோதிகள் உமிழ்ந்த
எச்சில் மட்டுமே எங்களின்
இலையைக் கழுவத் தெளிக்கும்
முதல் தண்ணீராய் போனது...

தெருநாயைக் காணும்
கண்களை வைத்து எங்களைப்
பார்க்கும் குடும்ப விளக்குகளைப்
பார்த்தால்தான் மானவெட்கமனைத்தும்
காரித் துப்புகிறது எங்களை...

என்ன செய்வது?
காம ஜடங்களின் கைகளில்
சிக்காமல், குடும்பவிளக்குகளனைத்தும்
கற்போடு இருக்க வேண்டி ,
நாங்கள் திரியாகி கற்பில்
தீக்குளிக்கிறோம்!

எங்களை ஏசும் சமுதாயம்
ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம்
பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...

நாட்டின் நியாயதர்மங்களனைத்தும்
நகையாடித் திரிகின்றன...
என்ன செய்வது?
நகைப்பிற்கிடமாக வாழ்க்கைப்பட்ட
எங்களின் வாழ்வு வழியற்றுப்
போனதே!

கல்விப் பணியில் பல்கலைக்கழகம்,
படித்த மாணவர்களுக்கே
பட்டமளிப்பு விழா!
பல்கலைக்கழகம் மட்டும் பார்த்த
கண்ணிற்கு அழும்பில்லாமல்
அப்படியே இருக்கும்!
ம்ம்ம்...
நாங்களும் பல்கலைக்கழகம்தான்,
சற்றே வித்தியாசம் ....
எங்களிடம் படுத்தவர்களை விடுத்து
கழகத்திற்குப் பட்டமளிப்பு விழாநடத்தி
"விபச்சாரி" என்ற பட்டமளிக்கும்
பொதுமக்கள்.....

காமப் புண்கள் அனைத்தும்
உமிழ்ந்து உறிஞ்சி எங்களை
எச்சில் ராணிகளாக்கிவிட்ட
சூழ்நிலையில் கண்ணாடிமுன்
நிற்கக்கூட கூச்சமாக உள்ளது....

வருங்காலங்களில் ,
குப்பாய்க் கள்ளர்கள் அனைவரும்
கோவலன்களாகிவிட்டால்
நாங்களும் கறைபடியா
கண்ணகிகளாக ஒளிர்விடுவோம்!

1 கருத்து:

Learn சொன்னது…

வாழ்த்த வார்த்தைகளே இல்ல அருமையா வார்த்தைகளால் கவி மழை பொழிந்திருக்கீங்க

//எங்களை ஏசும் சமுதாயம் ஒருமுறையேனும் எங்களை
உறிஞ்சும் அட்டைப்புழுக்களிடம் பேசினால் நாங்களும்
ஆதிரைகளாகி இருப்போம் ...//

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in