செவ்வாய், 1 மார்ச், 2011

கருணை கசியும் தருணம் !


மதியிழந்த விதிகள் சில
இன்பப்பசிக்கு ஆளான
உடலை களர்நிலமாக்கி ,
வித்திட்ட விதைகளை
முளையிலேயே கிள்ளிக்
குப்பையில் எறியும் கொடூரம்....!

முகிழாத முல்லையைக்
கிள்ளிக் குப்பையில் எறியும்
கோவையரின் கொங்கைகளை
அழன்று செந்தழலில் இட்டாலும்
செய்த பாவத்தினால்
வெந்திடவும் போவதில்லை ...!

குப்பையில் குதித்த
கோமேதகத்தை கையில்
எடுப்போர் அதற்குக்
கர்த்தராகிப் போகிறார்கள்...!

கருப்பையைத் தொலைத்துவிட்ட
நெருப்பைத் தொட்டுத் தூக்கியதும்
சிறு நுதலில் சிதறும் கேள்விக்
கணைகள் நெஞ்சைக் குத்திக்
கிழிக்கின்றன...!

கருப்பை சூன்யமாக்கப்பட்ட
இந்த இன்ப இதிகாசங்களுக்காகவே
இன்னுமாயிரம் தெரசாக்கள்
தெவிட்டாமல் பிறக்கவேண்டும்
இம்மண்ணில் ...!

சமுதாயமே ...
சட்டென்று ஒரு சட்டமியற்று,
"வளர்க்கும் தெம்பிருந்தால்
பெற்றுக்கொள்" என்று...!

வளர்ந்து அழிவது அழகல்ல...
பாவம் அந்தப்பிஞ்சுகள்
கருவிலேயே அழிந்துபோகட்டும்...!
வலி தெரியாமலாவது இறக்கட்டும்...!

அகராதியில் இருந்து நீங்கவேண்டிய
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!

எல்லாம் வல்ல இறைவா...
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !

மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!

8 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

//"வளர்க்கும் தெம்பிருந்தால்
பெற்றுக்கொள்"//
விழிப்புணர்வு அவசியம்.

கடைசி வரிகள் அருமை.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

யாதார்த்த கவிதை வரிகள்..
அருமை.. வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

சி.கருணாகரசு சொன்னது…

கருப்பையில் சுமந்தவள் மட்டும் இங்கே குற்றவாளி அல்ல!
கருப்பையில் சுமத்தியவனும் குற்றவாளியே... அவன் ஆதரவாய் இருந்திருந்தால் இந்த அவலம் உருவாகாதுதானே?

உங்க சமுதாய பார்வைக்கு என் வணக்கம்.

பெயரில்லா சொன்னது…

கள்ளிப்பால் பிஞ்சுகளுக்கு ஊட்டப்பட வேண்டியதல்ல... பெண் நஞ்சுகளுக்கு ஊட்ட வேண்டியது.

அரசன் சொன்னது…

நல்ல வரிகளை கொண்ட ஒரு சமூக அக்கறையுள்ள கவிதை வழங்கிய
உங்களுக்கு ஒரு பெரிய நன்றிகளும் வாழ்த்துக்களும் ...

அரசன் சொன்னது…

யதார்த்த உண்மைகளை தாங்கி கவிதை நெடுக பயணம் செய்துள்ளிர்கள் ...
திரு . கருணாகரசு சொன்னது போல் சில ஆண் மக்களும் இதற்கு காரணாமாக
இருக்கும் போது அவர்களையும் கொஞ்சம் சாடிருக்கலாம் ...

நல்ல கவிதை வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

தமிழ்தோட்டம் சொன்னது…

உண்மை வரிகள் தோழி... யதார்த்தமான கவி வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in