வியாழன், 15 ஜூலை, 2010

வண்ண நினைவுகள்......


ஆர்பரித்த அழகெல்லாம்
தோய்ந்து,
காதலில் திளைத்து
இன்றோடு அறுபது
ஆண்டுகள்......

நம் பற்கள்
அனைத்தும்
விழுந்து விழுந்து
விழா கொண்டாடுகின்றன......

முதிர்வின் நாதஸ்வரக்
கச்சேரியின் அரங்கில்
நரம்புகளின் நாட்டியம் .....

புருவங்களை
சுளிக்கமலே ,
சுருங்கிய நம்
நெற்றி,
ஆற்றுப்படுகையின்
மணல் சரிவுகள்.....

ஆனாலும்
என்றும் இளமையுடன்
நம் எண்ணங்களில்
வந்து விளையாடும்
வண்ண நினைவுகள் ,
நம் காதலில்
சிறந்த சரணாலயங்கள்......

என்று பார்த்தோம்
என்ற நினைவுகூட
மழுங்கிய உன்
மனதின் ஓலத்திற்கு
நினைவுகூர்கிறேன்
என்றும் கலையாத
நம் நினைவுகளை......

அன்றொரு நாள்
அந்திமாலை கறந்திட்ட
வெள்ளைப்பால்நிலா ,
என் கண் முன்னே
ரம்மியமாய் ரசித்துக்
கொண்டிருந்தது...
அம்புலியை.........

ஆஹா !
ஆச்சரியம்,
என் கண் முன்னே
கரைபுரண்டு ஓடியது....
காரணம்,
ஒரு முழுநிலவு
மூன்றாம் பிறையை
உற்றுப் பார்த்து
வலம்வந்ததால்............

அன்பே!
அன்று உன் செவ்விதழ்
சிந்திய மாணிக்க
மணிகளை இன்றுவரை
என்னால் கோர்க்க இயலவில்லை.......

என் காதோரத்தில்
உன் கரிசனம் மட்டும்
கதையாய் பேசுகிறது,
காதல் பாஷையில்.....

என் கண்கள் திறந்தால்
நினைவாகி,
சற்றே மூடினால்
கனவாகி,
தடம் புரள வைக்கிறாய்
என் மனதை.......

நம் இருமனம்
இணைந்த திருமணத்தில்,
உன்னைக் கொண்டு
என்னுள் கடிவாளமிட்டேன்,
என் உலகமே உன்னுள்
இயைந்து விட வேண்டி......

உயிரே!
உன் முகம் மட்டும்
பல யுகம் கடந்தும்
அப்படியே
என் அகத்தில்........

அழகே!
ஆச்சரியமாய்
இருக்கிறது...
கருவறையில் காவல்
இருந்த தாயையும் ,
கல்லறையிலும்
காவலுக்கு வந்த
உன்னையும் படைத்த
இறைவனை நினைந்தால்.......

நரை, திரை, மூப்பு,
நம் உடலிடம் மட்டும்
உறவாடும் உற்ற
பங்காளர்கள்......
இதயம் மட்டும்
இதற்கு விதிவிலக்கு,
இன்றும் இளமையாய்
துள்ளிக் குதிக்கிறது........

என் மடியில்
உன் தலையும்
உன் முடியில்
என் விரலும்
உரலும் போது ,
நம் இதயம்
இடம் மாறுகின்றது.........

இப்போதும் கூட
உன் இமைகளை
மூடித்தான் நினைவுகூர்ந்தேன்,
நம் நினைவுகளை......

உன் இமைகளின்
ஓரத்தில் வீற்றிருக்கும்
வெள்ளிசொட்டை
வீழ்த்திவிடாதே...

அவை நம் கண்ணீரல்ல,
நம் கன்னக்குழிகளில்
கசியும் வண்ண நினைவுகள்........!

கருத்துகள் இல்லை: