சனி, 25 டிசம்பர், 2010

துதிப்போம் இறைவனை!!!


இவ்வுலகத்தில் ஈடு இணையற்று பேறுபெருமையுற்று விளங்கும் தெவிட்டாத தேனமிழ்தம் இறைவனே! திருவள்ளுவரும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார்.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."

அதாவது இவ்வுலகத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த துன்பமும் நேராது!

நாம் மனமுவந்து இறைவனை வேண்டி ஒரு காரியத்தைச் செய்தோமானால் அதில் மிகச் சொற்பமாக வெற்றிகள் வீழும். நம் மனித உறுப்புக்களில் நம்பிக்கை என்பது இன்றியமையாத உறுப்பாக இருக்கா வேண்டும். முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்வோம்! இவ்வுலகில் தன்னை நம்புபவன் கடவுளை நம்பமாட்டான். தன்னை நம்பாதவன் கடவுளையும் சந்தேகிப்பான், வெற்றிகளையும் புகழ்களையும் கைக்கெட்டாத தொலைவில் இருப்பதாக உணர்வான். ஆனால் கடவுளை நம்புபவனோ, தன்னையும் வெறுக்க மாட்டான், தன் வெற்றிகளையும் இழக்க மாட்டான்.

அந்தக் காலங்களில் அதாவது ஆதிவாசிகளின் காலங்களில் மனிதன் எவ்வெவற்றைப் பார்த்து பயந்தானோ, அவற்றையெல்லாம் கடவுளாக பாவித்து வழிபட்டால் , அவ்வவற்றிலிருந்து தனக்கு துன்பம் வந்து சேராது என்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதையே பின்பற்றவும் தொடங்கலானான். இடைக்கால மனிதனோ இறைவனைப் பார்த்து இடறலடைந்தான். எப்போதும் ஒருவித கலக்கத்துடனும் , குழப்பத்துடனும் திரியலானான். அவனின் பெரும்பான்மையான கவலையே இறைவன் உண்மைய? பொய்யா? என்பதுதான். தனக்கு ஏதேனும் இன்பம் பொங்கினால் இறைவன் இனிக்கிறார். துன்பம் சிறிது தவழ்ந்தால் இறைவன் கசக்கிறார். ஆக இறைவனை தனது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உதவும் உபகாரியைப் போன்றுதான் பாவிக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இறைவன் தன் வாயிலில் கட்டி வைக்கும் வாழைமரமானவன். தன் இரு வாசற்கதவுகளை அலங்கரிப்பவனாகவும், தான் செய்யும் பூஜை புனஸ்காரங்களுக்கு ஓர் பொருளாகவும்தான் தென்படுகிறார்.

இன்றைய மனிதனோ இறைவனே தான் தான் என்ற நோக்கில் வளம் வருகிறான். கணினி யுகத்தில் வாழ்கிறோம், எனவே இறைவனை இறைஞ்சிக்கொண்டிருக்க நேரமில்லை என்று சொல்வதிலேயே பெருமையும் புகழும் அடைகிறான். இறைவன் அவனுக்கு ஓர் பிற்போக்குச் சிந்தனையாளர். அதாவது தனக்கு இன்பம் வந்தால் அதற்குக் காரணம் இறைவன் அல்ல, துன்பம் வந்தால் மட்டும் அந்த இறைவனை திட்டித் தீர்ப்பார்கள். அவர்களின் பிரச்சனைகளைக் கொட்டும் ஒரு குப்பைத் தொட்டியாக இறைவனை பாவிக்கின்றனர்.

முதலில் இறைவன் என்றால் என்ன? வானுக்கும் மண்ணுக்கும் இடையேயான ஓர் ஒப்பற்ற பரம்பொருள். சாதி, சமய, மொழி, மத, இனம் நீங்கிய ஓர் தனித்தன்மையான ஒளி. இறைவன் சிலைகளிலும் , புகைப்படங்களிலும் இல்லை. மனிதர்களாகிய நம் மனதில் உருவமற்ற ஓர் ஒளிர்பொருளாக இருக்கிறார். அதை நாம் எப்போது உணர்கிறோம் என்றால், உணர்வுகள் மொத்தம் ஒன்று சேர்ந்த நிலையில் , மனம், மொழி, மெய்யால் நெஞ்சம் நெக்குருக நினைக்கும்போதுதான் நம் நினைவுகளில் நீந்துகின்றார்.

இனிமேல் இறைவனை பாவிக்கும் இன்பம் நம் மனங்களில் தான் இருக்கின்றது! முதலில் இறைவனை வணங்கு வாழ்க்கை அனிச்சையாக உன் வசப்படும் ! நன்றி !

கருத்துகள் இல்லை: