வெள்ளி, 7 ஜனவரி, 2011

பிரிவு......


விடுதலைக்காகப் போராடிக்
கொண்டிருக்கும் உயிர்,
உடலிடம் மன்றாடும்
உருக்கமான தருணம்-பிரிவு !

உன்னுடன் பேசித்திரியும்
காலமெல்லாம் தெரியவில்லை
பிரிவில் என் உயிரைப்
பிரித்தெடுப்பாய் என்று !

நட்பும் ஒருவகைக்
காதல்தான் என்று எழுதிய
என் எழுதுகோல் ,
மையற்று மௌனித்து
மரணிக்கின்றது,
உன் பிரிவில்.......

சொர்ப்பமாய்க் கிடைத்திட்ட
உன் நட்பை,
அற்பமாய்த் தூக்கியெறிய
மனமற்றும்,
நுட்பமாய் நுகர்ந்த
உன் காதலை விட்டு
திட்பமாய் நகர்ந்த
என் நினைவுகளும் பட்ட பாடுகள்
இறைவனுக்கே வெளிச்சம் !

நிரந்தரமொன்று வாழ்வில்
இல்லையென்று
உணரப்பட்ட தருணம்,
ஊசிபோல் உலவிக்கொண்டிருக்கின்றது ,
என் இதயத்தைச் சுற்றி....

உன் பிரிவில் சப்தமிட்டு அழவும்
அவஸ்தையாய் உள்ளது ,
நம்மைக் காதலர்களென்று
கலங்கப்படுத்தி விடுவார்களோ
என்ற பயத்தில்.....

உண்மையான வரிகள் கூட
என் வாசகரிடையே
கற்பனைகளைக் கரைய
வாய்ப்புகளுண்டு ....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது ,
என் வலிகளை நான்
வரிகளாக்கியுள்ளேன் என்று !

1 கருத்து:

சி. கருணாகரசு சொன்னது…

வாழ்க நட்பு....
கவிதைக்கு பாராட்டுக்கள்.