திங்கள், 10 ஜனவரி, 2011

தற்கொலை .....


*கருவில் தோன்றிய
உருக்களெல்லாம்
காலதேவன் கரங்களால்
கட்டாயம் பெற்றுக்கொள்ளும்
மரணப் பரிசை.....

*கவலையில் தோய்ந்து
போக்கிடம் தெரியாது
புழுங்கும் தற்குறிகள் மட்டும்
தற்கொலையை நாடுவதேன் ?

*ம்ம்ம்.... விந்தையாகத்தான் உள்ளது....
மனவலியைத் தாங்காத
மனிதங்கள்,
மரணவலியை விலைகொடுத்து
வாங்கிவிடுகின்றன ....!

*அழுகும் உடலுக்குள்
ஆன்மாவைக் கொடுத்த இறைவன்
உங்களுக்கு அறிவைக்
கொடுப்பதில் அற்பனாகிவிட்டான் போலும்!

*துடைப்பமும் கூட வாழ்ந்துவிட்டுத்
தேய்கிறது......
நீ மட்டும் ஏன் வாழாமலேயே
தேய்கிறாய்?
வாழ்க்கை வழுக்கும் என்று
அறியாத அவலமா நீ ?

*வாழ்வதற்கு வழிதேட
ஜனனித்து விட்டு ,
மரணம் வீசும் வலையில்
சிக்கிப் பிணமாகாதே !
*கண்கள் ஒளியானால்
கும்மிருட்டுக்கும் வெள்ளையடிக்கலாம்!
பாதங்கள் பழகினால் ,
புதர்களும் பாதைகளாம் !
இதயம் திறந்தால் ,
சுழற்றும் சூறாவளியும்
சுவாசிக்கும் காற்றாகிப்போகும் !
*காத்திருக்கும் யுகமனைத்தும்
உனக்காகவே உயிர்க்கிறது !
நீ, உயிரோடு வாழ
உருவாக்கு உனக்கான
ஓர் உலகத்தை !!!

2 கருத்துகள்:

அரசன் சொன்னது…

துடைப்பமும் கூட வாழ்ந்துவிட்டுத்
தேய்கிறது......
நீ மட்டும் ஏன் வாழாமலேயே
தேய்கிறாய்?
வாழ்க்கை வழுக்கும் என்று
அறியாத அவலமா நீ ?//

வரிகள் அற்புதமா இருக்கு வனிதா

க.வனிதா சொன்னது…

நன்றி அரசன் ! உங்களுக்கு மிக்க நன்றி !