வியாழன், 10 பிப்ரவரி, 2011

அம்மா என்றழை !


பாலுக்காகப் பசித்தழும்
பச்சிளங்குழந்தை போல்
உன் அன்பிற்காக ஏங்கியழும்
பேரிளங்குழந்தை நான்!

உன்னை சூல் கொண்ட
கருப்பை இன்று கதறியழுகிறது !
கட்டியவனிருந்தால் இன்று
கால்வயிற்றுக் கஞ்சியாவது
கண்ணீரில்லாமல் குடித்திருக்கலாம் !
ம்ம்ம்... விதியின் சதி,
எனக்கு முன்னாலவன் இறந்து
புண்ணியம் கட்டிக் கொண்டான்...

என்குழவியே !
இன்றும் உன்னை மனமார
வாழ்த்துகிறேன்! எனக்கு ,
உலக உண்மைகளை
உணரவைத்ததர்க்காக ....

நில்லா அன்பையும்
நிலையான பண்பையும்
நிர்பந்தப் படுத்திகூறும்
உன் கண்களில், நானில்லாத்
தருணங்களில் தான்
மகிழ்வுக் குருவிகள்
சிறகடிக்கின்றன......!

அன்றென் கைவிரல் பிடித்து
நடந்த நீ,
இன்றென் பக்கம் நிற்கக்கூட
பலமுறை யோசிக்கிறாய்....
ம்ம்ம்.. உன்முன் காலம் என்னைத்
தீண்டத் தகாதவளாய் ஆக்கிவிட்டது !
உன் தந்தை மறைவின் பின்
அன்பு இல்லத்தில் கூட விட
மறுத்தேன் உன்னை...
இன்றோ , நான் முதியோர் இல்லத்தில்
கூட சேராத் தகுதியுடையவளாய்
நிற்கின்றேன் உன்னால்....

முன்பெல்லாம் சிறுதுன்பம்
வந்தாலும் நெஞ்சம் நெக்குருகும் ,
இன்று, கடலளவு துன்பம் வந்தாலும்
என் இதயத்தில் பனித்துளியாய்ப்
பட்டுச் சிதறுகிறது....
ம்ம்..அவற்றிக்கு நீ கொடுத்த
சன்மானத்திற்கு நிகராக
நிற்கக்கூட முடியவில்லையாம்....

அடிக்கடி அழுவதால்
என் முகமே எனக்கு மறந்துவிட்டது...
இன்னமும் கண்களின் ஓரம்
கண்ணீராய் கசிந்து கொண்டிருக்கிறது,
கற்பனை மட்டுமே பொய்யாக
நீ என்னிடம் அன்பு வைத்திருக்கிறாய் என்று...

ஆறுதலுக்காகவாவது ஒரு முறை
அழை என்னை
"அம்மா" என்று ...!

1 கருத்து:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

மிகவும் அருமையான கவிதை..
உண்மையி லே மிகவும் உருக்கமாக உள்ளது..
வாழ்த்துக்கள்..