வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

புன்னகை.!


புன்னகை,

ஐந்தறிவு அத்தியாத்திலிருந்து
ஆறாம் அறிவுக்குப் பாலமிட்டு
பயணிக்கும் ஓர் பகுத்தாளி!
மிருகங்களில் இருந்து விடுபட்ட
மனிதங்களின் ஆயுட்கால
அடையாள அட்டை!

அனுமதியில்லாது அனைவரிடத்திலும்
எடுக்கவும் கொடுக்கவும்
இறைவனால் நியமிக்கப்பட்ட
அசையாச் சொத்து !

இதழ்ப் பூட்டைத் திறக்கும்
இன்னிசைத் திறவுகோல்...
மரணத்தையே மறுதலிக்கப்
புறப்பட்டுவந்த மன்மத பாணம்!

விதவிதமான வண்ணவகைகளில்
சிரிப்புகளனைத்தும் சில்லுடைந்து
நம் முகங்களில் விலாசவில்லைகளை
ஒட்டிவிட்டுச் செல்கின்றன...

புன்னகை பொதுவான ஒன்றுதான்
அதை புசிப்பவன்தான் சூழ்நிலைக்கு
ஏற்றவாறு சுருட்டிக் கொள்கிறான்!
மனமகிழ்வோடு விதைக்கின்ற
புன்னகை, ஆயுட்காலம் வரை
அறுவடையாகிக் கொண்டே இருக்கும் !
பிறர் ஏழ்மையில் ஏதுவாய்
எள்ளி நகையாடும் சூன்யங்கள்
எவ்வளவு விதைத்தாலும்
களர்நிலமாகிப் போகும்!

செடிகொடிகள் சிரிக்காவிட்டால்
மலர்கள் மனம் வீசாது....
மனிதங்கள் சிரிக்கமறந்தால்
மாசு மனம் தூசு போகாது !

உயிர்களே !
உங்கள் இதழ்களில்
ஒருநாளைக்கு ஒருமுறையேனும்
புன்னகைப் பூவை
பிரசவித்துவிடுங்கள் !

உங்களின் ஆயுளில் இனாமாக
ஒருநிமிடம் வந்து ஒட்டிக்கொள்ளும் !

கருத்துகள் இல்லை: