வியாழன், 17 பிப்ரவரி, 2011

நிலவு


நிலவு,
இரவுத் தூரிகை கொண்டு
மேகம் தீட்டிய ஓவியம்!
திறந்த வானில்
நிர்வாணமாகத் திரியும்
தேவதைக்குழந்தை!

கரைந்துருகி
பிறைபிறையாய்
அகம்விரிக்கும் உன்
வெட்கத்திற்கு பெயர்
அமாவாசையா ?

முதல் பிறையோ ,
வெட்கம் உடைய
விருட்டென்று
தலைகாட்டும்
வெள்ளிப் பிழம்பு!
வான் குழவியின்
வாயில் விழுந்தெழும்
முதல் எயிறு!

மூன்றாம் பிறையோ,
மனித வாழ்க்கைப்பட்டவன்
வாழ்வில் அவசியமாகக்
காணவேண்டிய அழகோவியம்!

மனித வாழ்வியல்
உண்மைகளை
உறைந்துரித்தொழுகும்
உயிரோவியம்!

ஒருநாள் மட்டும்
கறைபடியா கண்ணகி..!

முழுநிலவோ ,
கடற்கரையோரங்களில்
நிற்கும் தருக்களை
கண்சிமிட்டாமல்
மலைக்க வைக்கும்
திரிலோகரம்பை !

மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !

பலவாறு பாடிப்போந்த
பல்லாயிரம் கவிஞர்களுக்கு
வர்ணிக்க வார்த்தையளித்த நீ
எனக்கு மட்டும் புயல்வந்த
வனமாய் காட்சியளிப்பது ஏன்?

எப்போதும் உன்னை என்வீட்டுக்
கிணற்றில் சிறைபிடிக்கிறேன் ,
என்றும் நில்லாயோ ?
நிலவஞ்சியே !!!

2 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

//மனிதக் கண்ணாடியில்
முகம்பார்க்கும் முதல்
பிரபஞ்ச அழகி !//

மிகவும் ரசித்த வரிகள்..

கவிதை அருமை :)

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.