வியாழன், 24 பிப்ரவரி, 2011

முதிர்க்கன்னி...


மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து
நான்!

நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும் ,
ஒரு நெல்லுமணியும்....!
அடுத்ததாகப் பிறப்பான்
ஒரு ஆண் சிங்கமென
மூன்றும் பெட்டைக் கோழிகளாக
பெற்றெடுத்தவர்கள் ,
தலைச்சம்பிள்ளை தரித்திரம்
என்றென்னை ஏசிவிட்டு
நாளும் ஆறுதலடைந்தனர்...!
என் குடும்பத்தின் பசிக்காகப்
பத்தாம் வுகுப்பைக் கூட
பாதியில் விட்டுவிட்டுப்
பழைய சோறாகிவிட்டேன்...!
என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!

ம்ம்ம்... நின்றென்ன பயன் ?
மதகுடைத்த என் வயது
மணாளனை மறுதலிக்கச் செய்கிறதே?
மாற்றியமைக்கக் கூட மனதில்லாமல்
மத்தள ஓசைக்கு ஏங்கி நிற்கின்றேன்...!

மத்தளத்திற்கு பதில் சிலர்
மெத்தனத்தால் கைக்கொட்டும்
ஒசையல்லவா என் காதில்
விழுகிறது....??

பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...!

எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!

சிலந்தி வாயில் சிக்கய பூச்சியாய் ,
உடலைக்கொடுத்து உயிரைக்காக்க
திராணியற்று நிற்கின்றேன்...!

என்னைப் போன்று இன்னும்
எத்தனை அன்றில் பறவைகள்
வாழ்க்கைப் பெருங்கடலைப்
பாராமல்,
வீட்டு முற்றத்தடி நீரில்
நீந்திக்கொண்டிருக்கின்றனவோ ?
தெரியவில்லை...!

கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....

4 கருத்துகள்:

arasan சொன்னது…

மிகசரியான பதிவு ,.,,,

arasan சொன்னது…

சில இடங்களில் மனது படிக்கும்போதே கரைந்து விடுகிறது ...

வாழ்த்துக்கள்

Learn சொன்னது…

மிகவும் அருமையான பதிவு தோழி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

மிக்க நன்றி தோழர்களே !