வெள்ளி, 11 மார்ச், 2011

செய்து விடாதே...


முற்றுப்புள்ளியாய்
நின்ற எனதருகே
மற்றுமொரு புள்ளியாய்
வந்தென் வாழ்விற்கு
ஆரம்ப அடித்தளமிட்டாய்...!

உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

இதுவரை மற்றவர்களுக்கெல்லாம்
நான் சொந்தமாய் இருந்தேன்...
இன்றிலிருந்து எனக்கென்று
எஞ்சி இருக்கும் சொந்தமொன்று
நீ மட்டுமே...!

உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்....!

கருத்துகள் இல்லை: