
அனுப்புனர்:
அம்மா (எ ) அவலை,
பத்துமாதம் சுமந்த
கருப்பை ஒன்றே
முகவரி.
பெறுநர்:
என் குழந்தை,
விதியின் விளையாட்டால்
விலாசம் தொலைந்தது ....
பொருள்:
என் மன ஆறுதலுக்காக மட்டுமே...!
என் இளவலே !
உன்னை பத்துமாதம் பிரிந்திருக்க
சிரமப்பட்டு எட்டாம் மாதத்திலேயே
ஈன்றெடுத்த இளவஞ்சி நான் !
அந்தச் சிசுச்சிறையிலும் உனக்குச்
சிங்கார மகுடம் சூட்டித்
தங்காசனதில் வைத்துச்
சித்தரித்தேன்!
அரைநிமிடம் கூட பிரியாமல்
உன் அழுகையைக் கூட
ரசித்திருப்பேன் !
உன் பூவிழிகளின் தூக்கத்திற்காக
தொலைந்த என் தூக்கங்கள்
ஒருநாளும் ஓலமிட்டதில்லை!
உன் பொற்பாதம் இம்மண்ணில் பட,
வெயிலுக்குப் பயந்து என்
உடலையே நிழலாக்கி
நின்றேன் !
இவற்றையெல்லாம் என்னைத்
தொலைக்கும் தருவாயிலாவது
சிந்தித்திருக்கலாமல்லவா ?
திருவிழாவில் தெரியாமல்
காணாமற்போகும்
குழந்தையா நான் ?
என்னைத் தெரிந்தே
தொலைத்து விட்டுச் சென்றாயே ?
உன் வீட்டில் தான் நானிருக்க
இடமில்லாமற் போயிற்று ,
உன் மனத்திலாவது
அளித்திருக்கலாமல்லவா ?
மூன்று நாட்கள் முட்டிமோதி
தேம்பித் திரிந்த என்னைக்
கண்ணில் கண்டோர் ,
காவல் துறையிடம்
ஒப்படைத்தனர்.....
விசாரணையில் அனாதையாய்
அறிமுகமான நான் இந்த
முதியோர் இல்லத்தில் அறிமுகமாகி ,
இன்றோடு மூன்றாண்டுகள்
ஆகிவிட்டது....!
ஆனால் ,
உன்னை இவ்வுலகில்
அறிமுகம் செய்த என்னை
அறியக்கூட மனமற்று இருக்கும்
உனக்கு ,
இந்தக்கடிதத்தை அனுப்பி
கவலையில் ஆழ்த்த மனமில்லாமல்
குப்பையில் வீசி எறிகிறேன்!
இம்மாதிரிதான் கண்ணீராலான
என் கடிதங்கள் மாதம்
ஒருமுறை குப்பைத்தொட்டிக்கு
அஞ்சல்வழிப்படுகின்றன !!!
6 கருத்துகள்:
ஒரு தாய்மையின் சோகம்..இதனால் தான் முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன........
அருமை.
வனிதா படிக்கும் போதே மனது என்னமோ பண்ணுகிறது ..
நிச்சயம் இந்நிலை மாற வில்லையெனில்
பாசத்தையும் நேசத்தையும் எங்கே போய் தேடுவது ...
கவிதை வழக்கம் போல நச்
நன்றி நண்பர்களே ! நிச்சயம் மாறிவிடும் ! மாற வேண்டும் !
நன்றி நண்பர்களே ! நிச்சயம் மாறிவிடும் ! மாற வேண்டும் !
கருத்துரையிடுக