காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 மார்ச், 2011

உன் பிறந்த நாள்...!


சுழல்கின்ற பூமியினுள்

சுழலாத சூறாவளியாய்

உன் அன்பு,

சுழற்றி அடிக்கிறது என்னை...!


உன் கண்களின் ஒருநிமிட

சந்திப்பில் என் ஒட்டுமொத்த

உணர்சிக் குருவிகளெல்லாம்

சிறகு முளைத்துப்

பறக்கத் துவங்குகின்றன....!


என் உணர்வுகள்

ஒருங்கிணைந்து

உருவான,

குழந்தை நீ ...!


இன்று,

நீ மகிழ்ந்தால்

உன் பற்களாய் பிறவியுற்று

பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!


துன்பத்தில் உழன்றால் ,

உன் கண்ணீராய்க்

கரைபுரண்டோடி

கவலைகளைக் கரைத்திடுவேன்...!


உன் பிறந்தநாள்

பந்தங்களிடையே

பழகிப்போனாலும்,


ஏனோ

இன்று எனக்கு மட்டும்

புதிதாய்ப் பிறந்த நீ...!

வியாழன், 24 மார்ச், 2011

விடுமுறைக் காதல்...!


கள்ளிச் செடிகளும்
முளைக்கத்தயங்கும்
களர்நிலமான என் இதயம்
நீ கால் பதித்துச் சென்றதும்
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!

உன் கல்லூரி விடுமுறைக்காலம்
என் வாழ்வின் வசந்த காலம்...!
வறண்ட என் பாதையில்
நிதம் தண்ணீர் தெளித்துக்
கோலமிட்டாய்....!

உன் விழிகளின் ஓரப்பார்வையோ
என் இரவுகளின் விடியல்களாக
வியாபித்துக் கொண்டிருக்கின்றது...!

விதியின் விளையாட்டால்
என் இதயத்தின் எமனாக
எதிர்வீட்டிலேயே
குடிவந்திட்டாய்...!

முதல் பார்வையிலேயே என்னை
மொத்தமாய் சில்லுடைத்துச்
சிதறச் செய்தாய்...!

உன் பார்வையில் பந்தாகிப்போன
என் இதயம் ,
முட்டிமோதி காற்றிறங்கி
காத்திருந்தது உன் காதலுக்காக...!

இரண்டே நாளில்
மௌன மொழிபேசிய உன் கண்கள்,
ஏனோ தெரியவில்லை
இதழ்ப் பூட்டைமட்டும்
திறந்திட மறுத்தது...!

எத்தனை நாட்கள்தான்
சொல்லாத காதலைச் சுமந்து
கொண்டு திரிவது...?

என் இதயம் உனக்கல்லாது
வேறுயாருக்காவது
நிச்சயிக்கப் பட்டிருக்குமோ
என்ற ஐயத்தில் நின்ற என்னை..,

நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து
இதயத்தைப் பெயர்த்துக் கையோடு
கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!

உண்மை விளங்கவே
ஒருவார காலம் பிடித்த என்
நெஞ்சம் ஊமையாகிக்
காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!

வெள்ளி, 11 மார்ச், 2011

செய்து விடாதே...


முற்றுப்புள்ளியாய்
நின்ற எனதருகே
மற்றுமொரு புள்ளியாய்
வந்தென் வாழ்விற்கு
ஆரம்ப அடித்தளமிட்டாய்...!

உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

இதுவரை மற்றவர்களுக்கெல்லாம்
நான் சொந்தமாய் இருந்தேன்...
இன்றிலிருந்து எனக்கென்று
எஞ்சி இருக்கும் சொந்தமொன்று
நீ மட்டுமே...!

உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்....!

ஞாயிறு, 6 மார்ச், 2011

உனக்காகவே ...

ஆளில்லாப் பொட்டல்காட்டில்
அரங்கேற்றம் ஓர் காதல்காதை...!
இரு குருகுகள் முணுமுணுக்கும்
குறுந்தொகைப் பாடல்,

"யாயும் யாயும் யாராகியரோ"என்று....

எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
விளங்க மறுக்கும் புரியாத புதிராய்
உன்மீது என் காதல்...!

என் சகாப்தத்தை
சம்பந்தப்பட்ட உன்னிடமே
சற்றும் விரிக்கமுடியவில்லை
என்னால்...

மற்றவர்களுக்கு மட்டும்
என் காதல் முழுமதியாய்
முகங்காட்டிவிடுமா? என்ன ?

பசிக்கும் தருணமெல்லாம்
உன் நினைவுகளே அடிசிலாகி
என் பசியாற்றிச் செல்கின்றன...!

என்றும் ஊமையாய் உறங்கிய
என் மனம் இன்றிலிருந்து
உறக்கத்தில் உரையாடல்
நிகழ்த்துகிறது உன்னிடம்....

எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள்
புதைத்தாய் என்று...

என் காலம் முழுதும்
உனக்குக் கண்ணாடியாகக்
காத்திருக்கிறேன்...

உன் சிரிப்பையும் சினத்தையும்
உள்ளவாறு பிரதிபலித்திடுவேன்..!
தினம் என்னில் உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்ல
மறந்துவிடாதே!

என் செங்குருதியில் உள்ள
இரு சிவப்பணுக்கள் ஒன்றுகூடும்
போதெல்லாம் தோன்றும்
ஒற்றை நினைவு இனி
நீ மட்டுமே !

உள்ளமுவந்து உறுதியளிக்கிறேன் ...
இனி என் பிறப்பும் இறப்பும்
உனக்காகவே!
புகழும் இகழும் உனக்காகவே!
மகிழ்வும் நெகிழ்வும் உன்னுடனே!

உன் இன்பத்தில் மறைந்திருந்து
துன்பத்தில் துணை நிற்பேன் !

இறைவா!
என் கோரிக்கைஏற்று அருளிடு,
எனக்கான என்னவரை....!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நாண மொழி..!


பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!

பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...

இதழ் மறுத்துக்
கண்கள் சிரிக்கும்
ஓர் மாய இன்பம்!
ஏற்றுக்கொள்கிறேன்....

ஆனால் என்னிடம் மட்டும்
ஏன் நொடிக்கொருமுறை
வீசிக்கொண்டே இருக்கிறாய் ?
உன் நாண மொழிகளை???

உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல்
எதற்காக காதோரத்தில்
ஓரிரு முடியை மட்டும்
சுற்றி விட்டு என் நெஞ்சை
நஞ்சால் தைக்கிறாய்??

நிலா உலாவும் வான் வீதியா
உன் நெற்றி ?
ஒரே சுருக்கத்தில் எனை
மடித்து மடக்கிவிட்டாயே ?

உன் கண்கள் இரண்டும்
மீன்களா என்ன ?
என் இதயத்தைப்
புழுவாக்கித் தூண்டிலில்
கட்டி நீரினுள் விட்டதும்
சட்டென்று இழுத்துவிட்டது ?

உன் கண்களில் வழியும்
கண்ணீரா நான்?
பன்னீர் போல் உன்
கன்னக்குழியில் தேக்கிவைத்து
நீந்துகிறாயே?

அப்படி என்ன பாவம் செய்தேன் ?
நான் சுவாசிக்க வேண்டிய
காற்றை உன் நாசி
திருடிச் செல்கிறது?

உன் காதணிக்கு என்
இதழோடு என்ன வேலை ?
எப்போது பார்த்தாலும்
என் இதழ் உச்சரிப்பிலேயே
ஊஞ்சல் ஆடுகிறது ?

உன் இதழ்கள் இரண்டும்
மதுபானம் அருந்திவிட்டதா?
சற்று நேரத்தில் என்னை
உன்னில் வீழ்த்திவிட்டதே ?

உன் முகம் ரோஜா மலரோ ?
முகப்பருக்கள் அனைத்தையும்
பனித்துளி என்றிண்ணி
சேர்த்து வைத்திருக்கிறது ?

காற்றில் கதைபேசும்
உன் கைகள் இரண்டும்
இப்போது என்னை
விலைபேசுகின்றன,
உன் இதயத்திற்காக ....

இத்தனையாண்டுகளாய்
நான் என் நிழலோடுதான்
பயணித்தேன் !
நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !
தெரியாமல் தான் கேட்கிறேன்
ஏன் என்னை இம்சிக்கிறாய் ?

என் நிழலாய் வரும்
உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?
புரியவில்லையடி....!

புதன், 23 பிப்ரவரி, 2011

பயணம் புதிது!


காதல்,
புரிதலில் மட்டுமே
இன்பம் காணும்
குழந்தை!

இருட்டுப் பாதையில்
பழகாத பாதங்கொண்டு
பயணிக்கும் இரு
விண்மீன்களின்
ஒளிவிளக்கு!

மன்றல் புரியா
இரு தென்றல்கள்,
மழை நனைக்க
குடை நனைய
குளிர்காய்ந்து வந்த
நெஞ்சங்கள் மட்டும்
நெடுந்தூரப் பயணமாய்....

இருளைப் பிளந்து
பாதை போடும்
நம் விழிகளுக்கு
வெளிச்சம் நல்கிய
நியான் விளக்குகளிடமும்
சினேகம் உயிர்க்கிறது!

அன்பு மீதூரப் பெற்று
அரவணைத்துக் கொண்ட
என்னுடல் இங்கே...
சொல்லிவிடு,
உனைக்கேட்காது
எங்கும் செல்லாத
என் உணர்வு எங்கே என்று...!

ஊரே அஸ்தமனமான
அரைப்பொழுதில் ,
எனக்கு மட்டும்
உதயமான உன்கனவு
என் இமைகளின் இடுக்குகளில்...

காத தூரம் சென்றாலும்
கால்வலிக்காத பயணம்
உன் தோளோடு சாய்ந்து
செல்கையில்....

சற்றே பொறுத்துக்கொள் !
வாழ்வு முழுவதும்
அடிமைச்சாசனம்
எழுதித்தருகிறேன்!

உன் அன்புச் சாலையில்
என்றும் பயணிக்க....!

வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாழ்வின் அத்தியாயம்


அழகிய திருமணத்தில்
அன்பான இரு மனங்களின்
சங்கமம்!

நம் வாழ்க்கையின்
அத்தியாயம் ஆரம்பமாகும்
தருணமிது !

விரியும் அதிகாலைப்பொழுது,
திரியும் குயிற்க்கூட்டங்கள்
இருட்கதவைத் திறக்கும் சூரியக்கைகள்,
இடக்கை தேநீர்க்கோப்பை தாங்க ,
வலக்கை உன் தாள் பற்ற ,
எந்தச் சகுனமும் பாராது,
என்விழிகளை நோக்கும் உன்விழிகள்......

பன்னீரால் ஆனதொரு வெந்நீர் ,
சுகந்தம் வீசும் சவர்க்காரக்கட்டி ,
உதவவரும் என் கரங்கள்
உபயோகமற்றுப் போக,
உன் குளியலில் நனையும் நான் ....

இரவின் நிலவு நிலைத்திருக்க ,
சன்னலில் வீசும் சாமரத்தை
சலனமின்றி சுவாசிக்க உன்
நெஞ்சில் என் தலைசாய்க்கும்
உன் கைகள்.....

வாரம் ஒருமுறை கடற்கரைப்பயணம் ,
கலைந்த உன் தலையைக்கோத
விரையும் என் விரல்,
குளித்த உன் தலைதுவட்ட
என் சேலைநுனி ,
உன் தலை உதிர்த்த தண்ணீர்
என் தாகம்,
என்னிதழீரம் துடைக்க உன்சட்டையின்
கழுத்துப்பட்டை.....
இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....

பாசப்பிணைப்பால் பசியற்ற வயிறு,
பழகாத என் சமையல் ,
ரசித்துப் பரிமாற நான்,
புசித்துப் பசியாற நாம்....

ஆயிரம் வேலையுடன் என் அடுக்களை,
அவசர வேலைகளில் உன் அலுவலகம்,
அலுக்காமல் அன்பைப் பரிமாற
ஆசையாய் தினமொரு முத்தம்....

இதுபோதும் என் வாழ்விற்கு !
என்றும் ,
வளம் சேர்ப்பேன் உன் வாழ்விற்கு !

புதன், 9 பிப்ரவரி, 2011

பிரிவோம்! சந்திப்போம்!


மேற்கு வானம் சிவந்து
கடலிடம் கசிந்துருகுவதுபோல்
நானும் உருகிக் கரைகிறேன்
உன் அன்பில் மொத்தமாக.....

நிழல்கள் இரண்டும் கூடி
நிஜமொன்றாய் ஆவது,
நீயின்றித் தவிக்கும் என்னை
இருகூறாய்ப் பிளப்பதற்கே !

கடல் நீரில் உப்பைப் பிரித்தெடுக்கும்
சோதனையே உன்னை என்னிடம்
பிரித்தெடுக்கும் முயற்சி!

ததும்பிய நீர் தரையில்
பட்டோடி விரும்பிய வண்ணஞ்
செல்லும் ...
விதும்பிய என் நெஞ்சம்
விலாசமில்லாமல் உன் அன்பைத்
தேடி ஆற்றுப்படும் !

இடைவெளிகள் எல்லாம் இம்சைகளாய்
பிரியும் தருணமனைத்தும்
பிய்ந்து போன என் அன்புமட்டும்
விரியும் தருணமாகவே
விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றது ....

நாளை அழிந்தழுகும் இந்த
உடலுக்கு மட்டுமே
பிரிவுப் பாலம் கட்டமுடியும்!
மதகுடைத்துக் கொண்டுவரும்
காதலுக்குப் பெருங் காற்றும்
கனலும் என்ன செய்துவிடும் ?

மறையும் சூரியனின் பிரியும்
இதயம் , நாளை
மீண்டும் உதயமாவதற்கே !
விதிவழி வந்த நம் இன்றைய பிரிவு
சதியுடைத்துச் சந்திக்கும் நம்
நாளைய பொழுதிற்க்காகவே!

சனி, 5 பிப்ரவரி, 2011

இதயத்தோடு இதமாக ....


வெற்றுக் காகிதக் கடலில்
வண்ணங்களாய் நாம்
மிதக்க, இரு இதயங்களுக்கிடையே
பகட்டாய் ஒரு படகு
காதல்!

அர்த்த ஜாமத்தில் என்
ஐம்புலன்களும் அசதியாய்த்
தூங்க, இதயம் மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது ,
உன் இதயத்தோடு .....

கண்கள் மூடி கவிதையை
ஆரம்பித்தால் , எழுத்துக்களனைத்தும்
பஞ்சம் பாடுகின்றன ! என்னிடம்
உன் பெயரைமட்டும் விடுத்தோடுகின்றன!
நினைவுகளுக்கும் கடிவாளமிட்டுக்
களைத்துப்போனேன் !
நீரில் கலந்த பாலைப் போல
என்னில் கலந்த உதிரமாய்
உன் நினைவுக்குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன...!

என் கேள்விக்கணைகள் அனைத்தும்
உன் விடை நாணில்ஏறி வலம்வர
காலம் முழுதும் காத்திருக்கின்றன....!
நீயின்றித் தவிக்கும் எனக்கு
உன் நினைவுகளே
இளைப்பாற இடமளித்து
இதமாக இனிக்கின்றன

என் இதயத்தோடு......!

திங்கள், 31 ஜனவரி, 2011

உன் கைகளில் ....


ஈராயிரம் யுகமான
என்னிருபது நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிரைக் குடித்துக்
கொண்டிருக்கின்றன.....

புகைப்படத்தில் புன்னகைத்த
உன்னை யார்க்கும் தெரியாமல்
களவாட வைத்தது
உன் புன்னகை.....
காத்துக் கொண்டே இருக்கின்றேன்
காரணமில்லாமல்....
அலுவலகத் தொலைபேசி
அழைத்தாலும் நீயாக இருப்பாயோ
என்றெடுத்து ஏமார்ந்தும் போகிறேன்....!

பேச நேரமற்று நீயிருக்க ,
பேசுவதற்கென்றே நேரம்
ஒதுக்கக் காத்திருக்கின்றேன்
காரணமில்லாமல்.....

நிச்சயத்தன்று உன்னிதழ்
சிந்திய இன்சொற்கள் தான்
இன்றென் நினைவுப் பசிக்கு
உணவளித்து வருகின்றன....

எந்நேரமும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் கைகளை உன் கைகளில்
தாரைவார்த்துக் கொடுக்கும்
தருணத்திற்காக .......!

சனி, 29 ஜனவரி, 2011

நம் மணநாள் காண...!

ஆயிரம் காலத்துப் பயிரை
ஒரே வாரத்தில் அறுவடை செய்ய
நிகழ்த்தப்படும் திருவிழா ,
பெண்பார்க்கும்படலம்...!

சொந்தங்கள் புடைசூழ
சுளிக்கும் உம் புன்னகையும்
வியர்த்த உம் பாதங்களும்
என் வாசலில் வியாபித்திருக்க ,
"மாப்பிள்ளை வந்தாராம்"
என்றென் தங்கை ஓடிவர,
தடதடவென்று தடுமாறிப்போனேன் !

அதுவரை இருந்த தைரியம்
அப்போதே கரையத்
தொடங்கிவிட்டது !

இனம்புரியாத நாணம்
இன்றோடு என் கண்களைப்
பூட்டித் திறவுகோலை
உம் கைகளில் திணித்தது !

முதல் முறை புடவை என்
முகத்தையே மாற்றியது ...
நேற்றிருந்த தாவணியும்
சல்வாரும் தலைமறைவாயின ....

உதறிய பாதத்தோடு
உங்களின் முன் உட்காருகையில்
உச்சி வியர்த்து மூச்சுத் திணறிப்
போய்விட்டது....

இருமுறைதான் உரசி இருக்கும்
நம் கண்கள் ,
இருநூறு முறையாயினும்
என் தோழியிடம் பகிர்ந்து
கொண்டிருந்திருப்பேன்
அந்நிகழ்வை ....!

இறைவனின் ஒப்பந்தப்படி
இருமனங்களின் மணத்திற்கான
அஸ்திவாரம்....
நமக்கு நிச்சயதார்த்தம் !
வெகுநாட்களாய் மௌனித்த
என் மகிழ்ச்சித் துணுக்குகள்
உம் வரிசைக்கேள்விகளால்
நிரம்பி கரைபுரண்டு
களித்திருந்தன.....

கேலிப் பேச்சுக்களும்
கிண்டல் ஏச்சுக்களும்
நிறைந்த சபையில்
உங்களின் வெட்கம் ஒரு
மார்க்கமாகவே இருந்தது
எனக்கு.....!

நீங்கள் ஊட்டிய இனிப்பை
இனிப்பை இன்றளவும்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
உங்களின் நினைவுகளோடு
சேர்த்து....!

ஒரே நாளில் என் துக்கங்களோடு
தூக்கத்தையும் களவாடிச்
சென்றவரே....
உங்களுக்காகக் காத்திருந்த
என்னிருபது வருடங்கள்
இம்மூன்று மாத இடைவெளியில்
தோற்று நிற்கின்றன....!

தனியே பேசுகிறேன் என்று
வீட்டில் அனைவரும் கேலிப்
பேசுகிறார்கள்....
ம்ம்ம் .. அவர்களுக்கு தெரியாது
நான் உங்களிடம் தான்
பேசிக்கொண்டிருக்கிறேன் என்று....!

செய்வதறியாது என் நினைவுகள்
உங்களின் நினைவுகளைச் சுமந்து
தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றன ,
நம் மணநாள் காண...!

வெள்ளி, 23 ஜூலை, 2010

நானும்......


மலரே!
உன் முகம் காண
மலர்கிறேன்
நானும் ஓர் மலராய்,
சூரியன்....!

இருளே!
உன் அழகை
ரசிக்கிறேன் ,
மேகத்தில் மறைந்து கொண்டு
நானும் ஓர் இருளாய்,
நிலவு..!

தீக்குளிக்க முயற்சிக்கிறேன்
நெருப்பில் நின்று
நானும் ஒரு தீயாய்,
மெழுகுவர்த்தி...!

நானும் தான் நினைக்கிறேன்
உன் இதயத்தின் இசைவுகளை
புரிந்துகொள்ள...
ம்ம்ம்... இன்று வரை
எனக்கு புரியாத
புதிராய்,
நீ...!

வியாழன், 22 ஜூலை, 2010

தேடியும்........


நிஜங்களின் நிழல்களில்
தேடித் திரிகிறேன்,
என் நினைவில் கரைந்த
உன் நினைவுகளை......

உனக்காய் வாழ்ந்த
நினைவுகள் ஊற்றெடுத்து
ஒப்பாரி வைக்கின்றன,
என் கண்களில்....

கடல் அலைகளில்
மிதக்கும் நுரைகள்
என்னை விலக்கிதள்ளுகின்றன,
நீயின்றி தனியே சென்றதால்......

என் பூங்காக்களின் பூக்கள்
வாடி மடிகின்றன...
உன் நினைவுகளற்று
நீர்த்துளி பட்டதால்......

பிறை நிலவில் உன் முகம்
தேடித் தவிக்கிறேன்,
ஒருமுறை காட்டிவிட்டுச் செல்...

இன்றும்,
முடிவிலது தொடர்கிறது
என் பயணம்...
கிடைக்காத உன்
நினைவுகளைத் தேடி......!

வியாழன், 15 ஜூலை, 2010

வண்ண நினைவுகள்......


ஆர்பரித்த அழகெல்லாம்
தோய்ந்து,
காதலில் திளைத்து
இன்றோடு அறுபது
ஆண்டுகள்......

நம் பற்கள்
அனைத்தும்
விழுந்து விழுந்து
விழா கொண்டாடுகின்றன......

முதிர்வின் நாதஸ்வரக்
கச்சேரியின் அரங்கில்
நரம்புகளின் நாட்டியம் .....

புருவங்களை
சுளிக்கமலே ,
சுருங்கிய நம்
நெற்றி,
ஆற்றுப்படுகையின்
மணல் சரிவுகள்.....

ஆனாலும்
என்றும் இளமையுடன்
நம் எண்ணங்களில்
வந்து விளையாடும்
வண்ண நினைவுகள் ,
நம் காதலில்
சிறந்த சரணாலயங்கள்......

என்று பார்த்தோம்
என்ற நினைவுகூட
மழுங்கிய உன்
மனதின் ஓலத்திற்கு
நினைவுகூர்கிறேன்
என்றும் கலையாத
நம் நினைவுகளை......

அன்றொரு நாள்
அந்திமாலை கறந்திட்ட
வெள்ளைப்பால்நிலா ,
என் கண் முன்னே
ரம்மியமாய் ரசித்துக்
கொண்டிருந்தது...
அம்புலியை.........

ஆஹா !
ஆச்சரியம்,
என் கண் முன்னே
கரைபுரண்டு ஓடியது....
காரணம்,
ஒரு முழுநிலவு
மூன்றாம் பிறையை
உற்றுப் பார்த்து
வலம்வந்ததால்............

அன்பே!
அன்று உன் செவ்விதழ்
சிந்திய மாணிக்க
மணிகளை இன்றுவரை
என்னால் கோர்க்க இயலவில்லை.......

என் காதோரத்தில்
உன் கரிசனம் மட்டும்
கதையாய் பேசுகிறது,
காதல் பாஷையில்.....

என் கண்கள் திறந்தால்
நினைவாகி,
சற்றே மூடினால்
கனவாகி,
தடம் புரள வைக்கிறாய்
என் மனதை.......

நம் இருமனம்
இணைந்த திருமணத்தில்,
உன்னைக் கொண்டு
என்னுள் கடிவாளமிட்டேன்,
என் உலகமே உன்னுள்
இயைந்து விட வேண்டி......

உயிரே!
உன் முகம் மட்டும்
பல யுகம் கடந்தும்
அப்படியே
என் அகத்தில்........

அழகே!
ஆச்சரியமாய்
இருக்கிறது...
கருவறையில் காவல்
இருந்த தாயையும் ,
கல்லறையிலும்
காவலுக்கு வந்த
உன்னையும் படைத்த
இறைவனை நினைந்தால்.......

நரை, திரை, மூப்பு,
நம் உடலிடம் மட்டும்
உறவாடும் உற்ற
பங்காளர்கள்......
இதயம் மட்டும்
இதற்கு விதிவிலக்கு,
இன்றும் இளமையாய்
துள்ளிக் குதிக்கிறது........

என் மடியில்
உன் தலையும்
உன் முடியில்
என் விரலும்
உரலும் போது ,
நம் இதயம்
இடம் மாறுகின்றது.........

இப்போதும் கூட
உன் இமைகளை
மூடித்தான் நினைவுகூர்ந்தேன்,
நம் நினைவுகளை......

உன் இமைகளின்
ஓரத்தில் வீற்றிருக்கும்
வெள்ளிசொட்டை
வீழ்த்திவிடாதே...

அவை நம் கண்ணீரல்ல,
நம் கன்னக்குழிகளில்
கசியும் வண்ண நினைவுகள்........!