திங்கள், 19 ஜூலை, 2010

பெண்ணுரிமை..


பெண்கள்,
அழைப்பில்லா சமுதாயத்தில்
அழையாத விருந்தாளிகள்...
பிழைக்கப் பிழைப்பிருந்தும்
தழைக்க முடியாமல்
தாழும் கொழு கொம்பற்ற
கொடிகள்......

பிறந்தவுடன் கள்ளிப்பால்,
உயிர் தப்பிப் பிழைத்தால்
நாங்கள் உயிர் வாழ்வது
உங்களின் மன்னிப்பால்.....
அப்படி என்ன தவறு
செய்து விட்டோம்?

உங்களது மேற்பார்வையில்
நாங்கள், நெல்வயலில்
வேண்டாது முளைந்திருக்கும்
கலைய வேண்டிய
களைகலல்லவா?

அம்மா,
நெஞ்சைத் தொட்டுச்சொல் ,
சமுதாயச் சிந்தனையற்று
என்றாவது எனக்கு
தாய்ப்பால் புகன்றிருப்பாயா?

பத்துமாதக் கருவறைக்குள்
சுகமாய்தான் இருந்தேன்,
நான் பெண் என்று
பத்து மாத முடிவிலல்லவா
உங்களுக்கு தெரிந்தது?

நாளிதழில் நடக்கும்
தினம் ஒரு திருவிழா
பெண்ணுரிமைப் போராட்டம்.....
போராட்டத்தின் பக்கத்துக்கு
செய்தியே ,
பத்து வயது சிறுமி
பாலியல் படுகொலை.....

ம்ம்ம்... வெட்டிப் பேச்சிலும் ,
மலட்டு எழுத்திலும்,
மலடாகி மனம்
புழுங்குகின்றது,
பெண்ணுரிமைச் சுதந்திரம்.......

பல்லாயிரம் தலைவர்கள்
பேசிப் பட்டுப்போன
பெண்ணுரிமை,
என் பேனா மை பட்டு
துளிர்த்து விடுமா என்ன?

சமுதாய மரமே,
எனக்கு உரிமை வேண்டாம்,
தயவு செய்து
எம்மை உதிர்க்காமல் இரு.........

கருத்துகள் இல்லை: