திங்கள், 16 ஆகஸ்ட், 2010

உயிர்கொல்லி ?!


இந்திய ஏகாதிபத்தியத்தை
ஏலம் எடுத்த அயல்நாட்டு
ஆதிக்க நோய்...

இந்திய மக்களின்
ஏக்கத்திற்கு முடிவு கொடுத்ததும்,
முற்று பெறாமல் சுற்றும்
ஊமை நோய்...

இரவுப் பிசாசுக்களின்
இன்ப வேட்டையில்
கருகிப்போன கற்புகள்
வீசிய அற்ப சாபம் .....

கருவறைக்குள்ளே
தாமாகவே காசு கொடுத்து
வைத்துக்கொண்ட
சூனியச் சுடுகாடு.....

பிறக்கும் சிசு
இறக்கும் தேதியை
கையோடு கொண்டுவரும்
காலக்கொடுமை.....

அரசாங்கமும் கூட
தடுக்காமல் ,
தவறுக்கு காவல் இருக்கிறது,
பல தடுப்பான்களை
விநியோகம் செய்து....

விழிப்புணர்வு மையங்களின்
விளிம்பில் நின்று
தலையில் முக்காடுடன்
உள்ளே சென்று
தலைகாட்டாமல்
வெளியேறும்,
தவறிய ஒழுக்கத்தின்
எஞ்சிய மிச்சங்கள்......

மருத்துவ உலகத்தையும்
மயக்கத்தில் ஆழ்த்தி இருக்கும்
மந்திர நோய்...

மயக்கத்தில் சிக்கிய
மன்னர்கள் அனைவரும்
அறிவர்,
"விளக்கினுள் சிக்கிய
விட்டில் பூச்சியின்
கதியை"....

விழித்திரு மனமே!
உயிர்கொல்லிக்கு
தீகொல்லியிட்டு
வளமான இந்தியாவை
வாழ வைப்போம்!

கருத்துகள் இல்லை: