வியாழன், 14 அக்டோபர், 2010

தமிழ்!!!


உலகுபுரந்த ஊட்டமிகு
உயிரெழுத்தும்,
மெய்யெழுத்தும் சேர்ந்து
முதலெழுத்தாகி அதனுள்
சிறப்பு எழுத்தாகிய "ழ"
உன்னில் தான் புகழ்பெற்றது!

முச்சங்கங்கள் போற்றி வளர்த்த
முக்கூடலில் விளைந்த
செம்முத்தே!
மதுரை மாநகரின் மயக்கும்
வீதிகளில் மணந்த மல்லிகையுடன்
இனிக்கும் தேன்சொட்டு நீயடி!

நீ! எங்கள் தாய் மொழியாகி,
தனிமொழியாகி, தலைமொழியாகி,
பின் செம்மொழியான உனக்கும்
இன்றைய நிலைமை,
மதில்மேல் பூனை.......

உன்னை வாழ்வாங்கு
வாழ வைத்த வள்ளல் பெருமக்கள்
இன்று அரசியல்வாதிகளாய்
மாறிப்போனார்கள்....
அவர்களின் அரசியல்
வாழ்கை பிறழாமல் இருக்க
உன்னைப் பிறழ்ந்து எதிர்கட்சிக்கு
ஏளன ஏவுகணைகளை
தொடுக்கும் தொந்தரவாளர்கள்
என்றும் நம் நாட்டில்.....

வேறெந்த மொழிகளிலும்
கண்டிராத இன்பத்தை உன்னிடம்
கண்டான் -பாரதி...!
பாரதியையே உன்னுருவில் தான்
நானே இன்று காண்கின்றேன்,
புத்தகத்தில்....!

முச்சங்கக் காலத்தில்
பொற்றாமரையில் பொங்கிவந்த
உன்னை, இன்று
தற்கொலைக்குத் தூண்டும்
தறி கெட்டவர்கள் இன்றும்
நம் இந்திய வீதிகளில்
திரிகிறார்கள்.....!

மாறி வரும் காலத்திற்கும்
நீதான் முதலெழுத்தாக இருக்கிறாய்...
பாரில் உள்ள கடவுளுக்கும்
நீதான் முதலெழுத்தாக இருக்கிறாய்...
பிறகு ஏன் பிள்ளையார் சுழியில்
பின்வாங்கி "உ" விற்கு
இடம் தருகிறாய்?

ஆம்! மாற்ற வேண்டியது
மொழியை மட்டுமல்ல,
பிள்ளையார் சுழியையும்
கூடத்தான்.....!

தமிழ் வாழ்க என்று
சப்தமிட்டு கூறுவதற்குகூட
மனம் அச்சப்படுகின்றது
புத்தி பேதலித்துவிட்ட
மனிதன் என்று கூறிவிடுவார்களோ
என்ற பயத்தில்.....

தமிழ் தலைகீழாய் தடுமாறுகின்றது!
அதை திசை திருப்பி மெருகேற்றுவோம் !
வாருங்கள் !

4 கருத்துகள்:

ivingobi சொன்னது…

wow.... vani unga kavithaigalil senthamizh konji vilaiyaadukirathu..... vaazhthukkal......

VELU.G சொன்னது…

நல்ல கவிதை

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

nandri

ayyam perumal சொன்னது…

போரிட பிறந்த தமிழ்
பிறர் கீறிட மாயுமோ ?

தமிழின் நிலை பற்றிய கவிதை நன்று : வாழ்த்துகள்